மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

புலம்பெயர் தொழிலாளர்கள்: தாமாகவே விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

புலம்பெயர் தொழிலாளர்கள்: தாமாகவே விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் துன்ப துயரங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து இன்று (மே 26) விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை நாட்டில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமாகவும் கவலையாகவும் உள்ளது. பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தூரத்தை பலர் நடந்தே கடந்துகொண்டுள்ளனர். இவர்களில் சிலர் பாதியிலேயே உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர், “செய்தித்தாள் அறிக்கைகள் மற்றும் ஊடக அறிக்கைகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நீண்ட தூரத்தை நடந்தே கடக்கும் துரதிர்ஷ்டவசமான மற்றும் பரிதாபகரமான நிலைமைகளை தொடர்ந்து காட்டுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்களை உச்சநீதிமன்றம் அறிந்து கொள்கிறது” என்று கூறி தாங்களாகவே விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை களைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் மே 28 ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மே 28 ஆம் தேதி தெரிவிக்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும், “ சிக்கித் தவித்த இடங்களில் அல்லது செல்லும் வழியில் அரசு நிர்வாகத்தால் உணவு மற்றும் நீர் வழங்கப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் கூறி வருகின்றனர். ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கங்களின் உதவி தேவை, குறிப்பாக இந்த கடினமான சூழ்நிலையில் இந்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் உதவி நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு கை கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

கடந்த மே 15 ம் தேதி, வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தபோது அதை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. “நாங்கள் எப்படி இதை நிறுத்த முடியும்?” என்று அன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் கேட்டார். இந்நிலையில் இன்று தாமாகவே முன் வந்து இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

-வேந்தன்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon