மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

விராட் கோலி கட்டிங்: சிகை அலங்காரத்தில் அசத்தும் 80 வயது மூதாட்டி

விராட் கோலி கட்டிங்: சிகை அலங்காரத்தில் அசத்தும் 80 வயது மூதாட்டி

கரூர் வேலாயுதம்பாளையம் அருகே 80 வயது முடி திருத்தும் தொழிலாளி விராட் கோலி கட்டிங் செய்து சிகை அலங்காரத்தில் அசத்தி வருகிறார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி தங்கவேல். இவர் பள்ளி பருவ நாட்களிலேயே தந்தையை இழந்தார். படிப்பை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் குடும்பத்தைக் காப்பாற்ற மாமாவின் சலூன் கடையில் வேலைக்கு சேர்ந்தார். 1960ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் சொந்த முயற்சியால் புதிய கடையைத் தொடங்கினார். தற்போது 80 வயதை தொட்ட போதிலும் தடையின்றி சென்று கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

இந்த வயதிலும் தனது சிகையலங்கார திறமையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார். தற்போது நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் ஆகியோரை போன்று முடி திருத்திக் கொள்வது நாகரிகமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தங்கவேல், கிரிக்கெட் வீரர் விராட் கோலியைப் போன்று முடி வெட்டி விடுகிறார். இதனால் அவரது கடைக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகிறார்கள்.

இதுபற்றி அவர், “60 ஆண்டுகளாக முடி திருத்தும் தொழில் செய்து வரும் நான், இதுவரை எனது கடையை பூட்டியதே இல்லை. முதன்முறையாக கொரோனா ஊரடங்கால் கடையை 60 நாட்களாகப் பூட்டியிருந்தேன். தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் கடையைத் திறந்து தொழில் செய்து வருகிறேன்.

இந்த 60 நாட்கள் கடை அடைக்கப்பட்டாலும் எனது தொழில் ஆர்வம் குறையவில்லை. கடையில் கிருமி நாசினியாக மஞ்சள் நீர் தெளித்து, வேப்பிலையைப் பயன்படுத்துகிறேன். கிரிக்கெட் வீரர் விராட் கோலி கட்டிங்குக்கு இளைஞர்கள் அதிக ஆர்வம்காட்டுகிறார்கள். 80 வயது ஆனாலும் இதுவரை எனக்கு தொழிலில் கைநடுக்கம் ஏற்பட்டது கிடையாது. இறுதி மூச்சு உள்ள வரை இந்த தொழிலை ஈடுபாட்டுடன் செய்வேன். எனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறுகிறார்.

ராஜ்

புதன், 27 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon