மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கியுள்ள ஊரிலேயே பொதுத் தேர்வு!

சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கியுள்ள ஊரிலேயே பொதுத் தேர்வு!

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்கள் தற்போது தங்கியிருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.

அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்வு மையங்களும் 3 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களின் பதட்டத்தையும் சிரமத்தையும் குறைக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊரிலிருந்து வெளிமாநிலம் அல்லது மாவட்டத்துக்குச் சென்ற மாணவர்கள் மீண்டும் தேர்வு மையம் இருக்கும் பகுதிகளுக்குத் திரும்ப முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் முன்பு தேர்வு எழுதிய மையங்களுக்கு செல்லத் தேவையில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை, பொதுத்தேர்வு எதிர்கொள்ள உள்ள மாணவர்கள் தேர்வு மையங்கள் அமைந்து இருக்கும் இடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தால், அவர்களை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு மாணவர்கள் சொந்த ஊரிலேயே தேர்வு எழுதலாம் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையும் இந்நடவடிக்கையை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-கவிபிரியா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon