மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

கொரோனா: அமெரிக்காவில் ஒரு லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு!

கொரோனா: அமெரிக்காவில் ஒரு லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் சிக்கித் தவிக்கும், அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா. இதில் உலக அளவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்திலிருந்து தான், இதனைத் தடுக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களில் அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் வீரியத்தைக் குறைத்து மதிப்பிட்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்பின்2 லட்சம் இறப்புகள் ஏற்படும் என்று தெரிவித்தார். அதோடு தன்னுடைய கணிப்பை மாற்றி 50 முதல் 70 ஆயிரம் வரைதான் இறப்புகள் இருக்கும் என்று கூறியிருந்தார்.

ஆனால் ட்ரம்ப் கூறியதற்கு மாறாக, அமெரிக்காவில் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அங்கு 17,45,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இறப்பு எண்ணிக்கை 1,02,107 ஆக உள்ளது.

உலக அளவில் 57,92,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,57,479ஆக இருக்கிறது. இதில் ஒரு லட்சம் பேர் வல்லரசு நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது உலக மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து அதிபர் ட்ரம்ப், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், இப்போது இருக்கும் இறப்பு விகிதத்தைக் காட்டிலும், 25 மடங்கு அதிகரித்திருக்கும், அதுபோன்று சோதனைகள் அதிகளவு நடத்தப்படுவதாலே பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். சீனாவில் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,333ஆகவும், உயிரிழப்பு 4,531ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-கவிபிரியா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon