மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

வட்டி கேட்டு நிதி நிறுவனங்கள் மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள்!

வட்டி கேட்டு நிதி நிறுவனங்கள் மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள்!

அரசின் அறிவிப்பை மீறி கடன் தொகைக்கு அபராத வட்டி கேட்டு நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.

முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் பிருந்தா, கிளை செயலாளர் சித்ரா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நான்காவது மண்டல செயலாளர் வடிவேல் ஆகியோருடன் சேர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமாரிடம் தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், “முருகம்பாளையம் பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் தினக்கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் அன்றாடம் கிடைக்கும் வருவாயை வைத்து உணவுத்தேவைக்கான செலவு, வீட்டு வாடகை உள்ளிட்டவற்றை கட்டி வாழ்க்கை நடத்திவருகின்றனர். ஊரடங்கு காரணமாகக் கடந்த 60 நாட்களாக இவர்கள் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு வசிக்கும் பலர் சிறு கடன்களை வழங்கும் நுண்கடன் நிதி நிறுவனங்களில் (மைக்ரோ பைனான்ஸ்) கடன்களை பெற்று வீட்டு செலவை மேற்கொண்டு வருகின்றனர். கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்தாத நபர்களிடம் வட்டி மட்டுமின்றி, அபராத வட்டியையும் சேர்த்து கட்டுமாறு வற்புறுத்துகின்றனர். மேலும் கடன் வாங்கியவர்களை தங்கள் ஊழியர்கள் மூலம் வட்டி கேட்டு மிரட்டுகின்றனர்.

கடன் தவணையைச் செலுத்த மத்திய, மாநில அரசுகள் வருகிற ஆகஸ்ட் மாதம் வரை சலுகை அறிவித்துள்ள நிலையில் இது போன்ற நிதி நிறுவனங்கள் பொதுமக்களை வட்டி கேட்டு மிரட்டுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே இது போன்ற நிதி நிறுவனங்கள் அரசின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon