மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் முயற்சி முறியடிப்பு!

மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் முயற்சி முறியடிப்பு!

புல்வாமா தாக்குதலை போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். கார் ஒன்றில் நிரப்பப்பட்ட 350 கிலோவுக்கு கூடுதலான சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் இந்த தாக்குதலை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை மூலம் கிடைத்த தகவலை அடுத்து, ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையினர் நேற்று காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடி அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அதன்படி நேற்று இரவு போலி பதிவு எண்ணைக் கொண்ட ஒரு வெள்ளை ஹூண்டாய் சாண்ட்ரோ கார் புல்வாமா பகுதியில் இருந்த ஒரு சோதனைச் சாவடி வழியாக வந்துள்ளது. அதனை சோதனை பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் நிறுத்த முயற்சித்த போது, அங்கிருந்த தடுப்பை தள்ளிவிட்டு கார் வேகமாக சென்றுள்ளது.

கார் நிற்காமல் சென்றதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் காரை விரட்டிச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது கார் ஓட்டுநர் தப்பி ஓடியதாகவும், அந்த காரில் 40-45 கிலோ அளவிலான ஐஇடி மருந்து பொருட்கள் இருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, இரவு முழுவதும் கார் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கார் கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் அழிக்கப்பட்டன. சரியான சமயத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் மீண்டும் ஒரு மிகப் பெரிய தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்று டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டுகள் அழிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

-கவிபிரியா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon