மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

உலகப் போருக்கு பின், கொலம்பியாவில் வாழ்ந்தாரா ஹிட்லர்?

உலகப் போருக்கு பின், கொலம்பியாவில் வாழ்ந்தாரா ஹிட்லர்?

"1945ஆம் ஆண்டு, ஏப்ரல் 29ஆம் தேதி ஹிட்லரும் அவரது காதலியுமான ஈவா பிரவுனும், ரைக் சேன்ஸலரி தலைமையகத்தின் அடியில் இருந்த பதுங்கு குழியில் திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மறுநாள் (ஏப்ரல் 30) ஹிட்லரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு பின்பு, ஹிட்லரின் உடல்கள் எரிக்கப்பட்டன".

மேற்கண்ட தகவல்கள் தான் நமக்கு இன்றும் ஹிட்லரின் மரணம் தொடர்பான அதிகாரபூர்வமான வரலாறாக இருந்து வருகிறது. ஹிட்லரின் சகாப்தம் பெர்லின் பதுங்கு குழியோடு முடியவில்லை என்பதுதான் தற்போது லேட்டஸ்டாக வெளியாகியுள்ள பரபரப்பு. கடந்த வாரம் வகைப்படுத்தப்பட்ட சிஐஏ கோப்புகளில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கொலம்பியாவில் ஹிட்லர் சுற்றித் திரிந்திருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பான ஆவணங்களை சிஐஏ வகைப்படுத்திய பின்னணியில் வெளிவந்த தகவல்களின்படி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கொலம்பியாவில் அடால்ஃப் ஹிட்லர் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்து சிஐஏ விசாரித்துள்ளது.

ஹிட்லர் இரண்டாம் உலகப் போரிலிருந்து தப்பித்து 1950 களில் கொலம்பியாவில் வாழ்ந்தார் என்ற வதந்திகள் அவ்வப்போது உலவினாலும், அமெரிக்கா இது குறித்து விசாரித்துள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பாக சுமார் 2,800 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்ட சூழலில், தற்போது இத்தகவல் மக்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த ஆவணங்களின்படி, சிஐஏ ஏஜென்டுகளுக்கு ஒரு முன்னாள் எஸ்எஸ்(Schutzstaffel- ஹிட்லர் மற்றும் நாஜி கட்சியின் கீழுள்ள ஒரு பெரிய துணை ராணுவ அமைப்பு) அதிகாரியிடமிருந்து 1950 களில் ஹிட்லர் கொலம்பியாவில், முன்னாள் நாஜிக்கள் வாழும் சமூகத்தில் வசித்து வந்ததாக தகவல் கிடைத்தது. ஆரம்பத்தில், சிஐஏ இத்தகவல்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பின்னர் ஒரு படத்தைக் குறிப்பிட்டு தங்கள் மேலதிகாரிகளுக்கு ஒரு அறிக்கையை அனுப்பினர். இந்த குறிப்பின்படி, முன்னாள் எஸ்.எஸ். அதிகாரி பிலிப் சிட்ரோயன் சி.ஐ.ஏ ஏஜென்டுகளை தொடர்பு கொண்டு, முன்னாள் நாஜி சர்வாதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவரை தான் சந்தித்ததாக அவர்களுக்கு அறிவித்தார்.

எஸ்எஸ் அதிகாரி கூறிய தகவல்களை சரிபார்க்க சிஐஏ முடிவு செய்த நேரத்தில், அடால்ப் ஷட்டில்மேயர் என்ற சந்தேகப்படும் அந்த நபர் ஏற்கனவே அர்ஜென்டினாவுக்கு தப்பி ஓடியிருந்தார். இருப்பினும், சிஐஏ இத்தகவல் குறித்து மிகவும் சந்தேகம் கொண்டிருந்த காரணத்தால் அது மேற்கொண்டு விசாரணையை தொடராமல் கைவிட்டது. சிஐஏ ஆவணங்களின்படி, முன்னாள் எஸ்எஸ் அதிகாரி தான் சந்தித்த நபர் "அடால்ஃப் ஹிட்லரைப் போலவே தோற்றமளித்தார். மேலும் அவர் தான் தான் ஹிட்லர் என்றும் கூறினார்" என்றுள்ளது. கொலம்பியாவின் துன்ஜாவில் உள்ள ரெசிடென்சிஸ் கொலோனியல்ஸ் என்ற இடத்தில் நாஜி சர்வாதிகாரியை சந்தித்ததாக பிலிப் சிட்ரோயன்(Philip Citroen) என்ற அந்த அதிகாரி கூறினார். இந்த ரெசிடென்சிஸ் கொலோனியல்ஸ் இடத்தில் தான் முன்னாள் ஜெர்மன் நாஜிக்கள் அதிகளவில் கூட்டம் கூட்டமாய் வசித்து வந்ததாக அவர் விவரணையில் உள்ளது.

"சிட்ரோயனின் கூற்றுப்படி, துன்ஜாவில் வசித்த ஜெர்மனியர்கள் அடால்ப் ஹிட்லரை கடந்த கால வழிபாட்டுடனே பின்தொடர்ந்து, அவரை‘ எல்டர் ஃபுரர்’ (Elder Fuhrer - மூத்த தலைவர்) என்று நாஜி வணக்கத்துடன் வாழ்த்தினர்,” என்று சிஐஏ ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த உண்மையை நிரூபிக்க, முன்னாள் நாஜி தலைவரைப் போல தோற்றமளிக்கும் நபருடன் சிட்ரோயன் சிஐஏ ஏஜெண்டுகளுக்கு புகைப்படத்தைக் காட்டியுள்ளார்.

சிஐஏ இந்த ஆதாரங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் 1955 ஆம் ஆண்டில் சிமெலோடி -3 என்ற குறியீட்டு பெயர் கொண்ட இரண்டாவது மனிதர், அதே கதையை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். கொலம்பியாவிற்கு மீண்டும் வருகை தந்தபோது, பிலிப் சிட்ரோயன் மாதத்திற்கு ஒரு முறை ஹிட்லரை சந்தித்ததாக குறிப்பிட்டார் அவர். மேலும், இவர் சிஐஏ ஏஜெண்டுகளுக்கு ஒரு படத்தையும் வழங்கினர். அதில் சிட்ரோயன் ஹிட்லராக இருக்க வேண்டிய மனிதருடன் சேர்ந்து தோன்றுகிறார். மேலும் அதில் அடால்ஃப் ஷட்டில்மேயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிமெலோடி -3 கூற்றுபடி, 1955ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் கொலம்பியாவை விட்டு வெளியேறி அர்ஜென்டினாவில் குடியேறியுள்ளார். சிமெலோடியின் புதிய தகவல்களின்படி, சிஐஏ தங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பிய ஒரு அறிக்கையில், ஆனால் அவர்கள்(சிட்ரோயன், சிமெலோடி) என்ன சொன்னார்கள் என்பதை சரிபார்க்க முடியாததால், சாத்தியமான விசாரணையை கைவிடுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர். மேலும் இதற்கான நிதி முயற்சி மிகப் பெரியதாக இருந்திருக்கும் என அவர் கூறுகிறார்.

தொடர்ந்து ஹிட்லரின் மரணம் குறித்த மாற்றுக் கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், சிஐஏவிடம் இருந்து தற்போது வெளியாகியுள்ள ஆதாரங்கள் ஹிட்லர் மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதை மறுப்பதற்கில்லை.

நன்றி: மீடியம்.காம்

-முகேஷ் சுப்ரமணியம்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon