மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

ட்விட்டர் ஃபேஸ்புக்கை மூடும் திட்டத்தில் ட்ரம்ப்

ட்விட்டர் ஃபேஸ்புக்கை மூடும் திட்டத்தில்  ட்ரம்ப்

சமூக வலைதளங்கள் மீதான, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகையில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழமைவாத கருத்துக்களை அடக்கும் சமூக வலைதளங்களை மூட உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் ஏற்பட்ட மோதலினால் ஏற்பட்டப் விவகாரம் இந்த நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்டுகளுக்கு அருகே அதன் உண்மைத் தன்மையை சோதிக்கும் விதமாக, அந்த பதிவு குறித்த சிஎன்என் செய்தியை பதிவிட்டது ட்விட்டர்.. சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கும், ட்ரம்பிற்கும் பல காலமாக வார்த்தை போர்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோல ட்ரம்பின் பதிவுகளுக்கு உண்மைத்தன்மையை காட்டும் விதமாக லிங்க்குகளை ட்விட்டர் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.

வலைதளங்கள் குறித்து என்ன மாதிரியான உத்தரவு பிறப்பிக்கப்பட போகிறது என்பது குறித்து இதுவரை எந்த தெளிவான தகவலும் அதிபர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை.

ட்ரம்புடன் தொடர்ந்து பயணிக்கும் அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் இதுகுறித்த கேள்வியை எழுப்பிய போது எந்த விதமான தகவல்களையும் அவர்கள் கூறவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம், ட்விட்டர் வலைதளம் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு சார்பாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ”தன்னை இந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்க வைப்பதற்காக பெரிய தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், ஏற்கனவே 2016 அவர்கள் தோற்றதால் தற்போது கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் ட்விட்டரிலேயே பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

சமூக வலைதளங்களுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் நீண்டகாலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில், தற்போது ட்விட்டர் இந்த உண்மைத்தன்மை லிங்க்கை பதிவிட்டதால் மீண்டும் அது வெடித்திருக்கிறது.

”சமூக வலைதளங்கள், ஒருவரது பேச்சு சுதந்திரத்தை அடக்குவதாகவும், அதை நான் நடக்க விட மாட்டேன்” எனவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோயல் “எங்களுடைய கம்பெனியின் நடவடிக்கைகளுக்கு யாரையாவது குற்றம் சுமத்த விரும்பினால், அது என்னை மட்டுமே. எனது ஊழியர்களை விட்டுவிடுங்கள், தவறான மற்றும் போலி தகவல்களை உலக தேர்தல் களத்தில் கண்டறிந்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்போம். ஏதேனும் தவறு செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் வெளியிட்டு இருந்த அதே கருத்தை ஃபேஸ்புக்கிலும் அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்கு தவறான செய்தி எச்சரிக்கை எதுவும் ஃபேஸ்புக்கில் வழங்கப்படவில்லை.

போலி தகவல்கள் மற்றும் பொய்யான தகவல்கள் வெளியிடுவது குறித்து சர்ச்சை எழுந்ததால் ட்விட்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதனுடைய பாதுகாப்பு பாலிசிகளை பலப்படுத்தியது. ட்ரம்பின் பேச்சுக்கு பிறகு நியூயார்க் வர்த்தக சந்தையில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் குறைந்துள்ளன.

- பவித்ரா குமரேசன்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon