மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

முருகன், நளினி வீடியோ காலில் பேச அனுமதியில்லை: தமிழக அரசு!

முருகன், நளினி வீடியோ காலில் பேச அனுமதியில்லை: தமிழக அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் நளினியை வாட்ஸ் அப் கால் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 28 ஆண்டுகளாக நளினி மற்றும் முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இறுதியில், முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்த போது இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்க்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் முருகன் நளினி இருவரும் இலங்கையிலுள்ள

முருகனின் தாயார் சோமணி அம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் முருகனின் தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்க்க அரசு அனுமதிக்காதது குறித்தும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மே 26ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருவரையும் தாயார் மற்றும் சகோதரியிடம் வீடியோ காலில் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பி இதற்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி. ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் வெளிநாடுகளில் இருப்பதால் இவ்விவகாரம் மத்திய வெளி விவகாரத்துறை சம்பந்தப்பட்டது ஆகும். எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-கவிபிரியா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon