மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

பிராமணர்களுக்கு எதிரான வெப்சீரிஸ்? பாஜக எதிர்ப்பு!

பிராமணர்களுக்கு எதிரான வெப்சீரிஸ்? பாஜக எதிர்ப்பு!

ஜீ தொலைக்காட்சிக் குழுமத்தின் ஜீ 5 நிறுவனம் சார்பாக ஒளிபரப்பாக இருக்கும் காட்மேன் வெப் சீரிஸில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இந்து மதத்தையும் பிராமண சமூகத்தையும் அவமதித்ததாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. கொரோனா ஊரடங்கில் திரைப்படங்களை விட வெப் சீரிஸ்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில், பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த நாட்களில் வெப்சரீஸில் நடிக்க எதிர்பார்க்கிறார்கள். இந்த வகையில், ஜீ 5 சார்பாக ஜூன் 12, 2020 அன்று காட்மேன் வெளியிடப்படுகிறது.

இந்தத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார், இதில் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் டிரைலர் நேற்று (மே 27) வெளியிடப்பட்டது. அதில், “என்னை சுத்தி இருக்கிற பிராமணர்கள் எல்லாம் அயோக்கியனா இருக்கானுங்க. இந்த உலகத்துல ஒரு பிராமணன் எப்படி இருக்கணும்னு காட்டப் போறேன்’ என்று இடம்பெற்றிருக்கும் வசனங்கள், காட்சிகள் பிராமணர்களை, இந்து மதத்தை அவதூறு செய்வதாகவும் இந்து மத அமைப்புகள் இந்தத் தொடரைக் குற்றம் சாட்டுகின்றன

இன்னொரு பக்கம் இந்த டிரைலரில் நடிகர் டேனியல் பாலாஜியின் பாத்திர உடையமைப்புகள் நித்யானந்தாவை நினைவூட்டுவது போல இருப்பதாக சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.

இதற்கிடையில் இந்த வெப்சீரிசை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் சட்டப் பிரிவின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

அந்தப் புகாரில், “ காட்மேன் என்ற ஆன்லைன் திரைப்படம் ஒன்றின் டிரைலர் ZEE 5 என்கிற ஆன்லைன் சேனலில் வெளியாகி உள்ளது. அதில்,

பிராமணர்களைப் பற்றியும் , இந்து மதத்தைப்பற்றியும், அவதூறான கருத்துக்களும் ,கொச்சையான காட்சிப்படுத்துதல்களும்,வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் ,அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும் காட்சிகள் இருக்கின்றன.

மேலும், வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினமூட்டும் நோக்கத்திலும் , மத அமைதியை குலைக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பும் வகையிலும் அமைந்துள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், ZEE 5 நிர்வாக இயக்குனர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505,188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-வேந்தன்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon