மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பாகத் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் பெரிதும் பாதிக்கப்பட்டது புலம் பெயர் தொழிலாளர்கள் தான். ஆயிரக்கணக்கான கி.மீட்டர் நடந்து சொந்த ஊருக்குச் செல்லுதல், உணவின்றி உயிரிழப்பு, ரயிலில் அடிபட்டு 16 தொழிலாளர்கள் பலி என பல்வேறு பெருந்துயரங்களை அனுபவித்து வந்தனர்.

இதுதொடர்பாக ஊடகம் மற்றும் செய்தித்தாள்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்த மனு மே 28ஆம் தேதிக்குப் பட்டியலிடப்பட்டது. அதன்படி மனு இன்று விசாரணைக்கு வந்த போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குப் பிறகு மத்திய மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் சிறந்த கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில துரதிர்ஷ்டமான சம்பவங்கள் நடந்துவிட்டன. அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி அசோக் பூஷண், “மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காதது உண்மை. அதை நாங்கள் சர்ச்சை ஆக்கவில்லை. உதவி தேவைப்படுபவர்களுக்குக் கிடைக்கவில்லை. மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து துஷார் மேத்தா, “புலம்பெயர்ந்த ஒவ்வொரு தொழிலாளியையும் அவர்களது கிராமத்திற்கு அனுப்பும் வரை அரசாங்கம் தனது முயற்சிகளை நிறுத்தாது. மே 1-17 ஆம் தேதி வரை 50 லட்சம் தொழிலாளர்கள் ரயில் மூலமாகவும், 41 லட்சம் தொழிலாளர்கள் சாலை மார்க்கமாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர். நாளொன்றுக்கு 1.85 லட்சம் பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 137 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

அப்போது, சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து நீதிபதிகள் மேத்தாவிடம் விசாரித்தனர். பயண கட்டணம் தொடர்பாக எந்த தெளிவும் இல்லை எனவும், இவ்விவகாரத்தை இடைத்தரகர்கள் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் அல்லது பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டதா?

டிக்கெட் எடுத்துப் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பின்னர் அந்த தொகை திரும்ப அளிக்கப்படுமா? என்று பல்வேறு கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர்.

இதற்கு துஷார் மேத்தா, “புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநிலமோ அல்லது சென்று சேரும் மாநிலமோ ஏற்கின்றன. சில மாநிலங்கள் முதல்கட்டமாகக் கட்டணங்களை வசூலித்தன, சில மாநிலங்கள் இலவச பயணங்களை வழங்குகின்றன. பயணத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீரை ரயில்வே வழங்குகிறது. இதுவரை 80 லட்சம் உணவு பொட்டலங்களும், ஒரு கோடி வாட்டர் பாட்டில்களும் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இதையடுத்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், “பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது ரயில்வே கட்டணங்களைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது அந்த மாநில அரசு உணவு வழங்கிட வேண்டும், பயணத்தின் போது ரயில்வே துறை உணவும், தண்ணீரும் வழங்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சென்று சேரும் வரை அவர்களுக்குக் குடிநீர், உணவு ஆகியவற்றை அவர்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு ரயில் அல்லது பேருந்துக்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை அவர்கள் சிக்கியுள்ள மாநிலங்கள் அறிவிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமின்றி அவர்கள் விரைவில் போக்குவரத்து வசதியைப் பெற, அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வது கண்டறியப்பட்டால் அவர்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று தேவையான உதவிகளைச் செய்து தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து ஜூன் 5ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

-கவிபிரியா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon