மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

ஜூன் 3 முதல் பேருந்துகள்: ஆயத்தமாகும் அரசு!

 ஜூன் 3 முதல் பேருந்துகள்: ஆயத்தமாகும் அரசு!

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமலில் இருக்கும் ஊரடங்கு, பொதுமுடக்கத்தின் நான்காம் கட்டம் வரும் மே 31 ஆம் தேதியோடு முடிகிறது. அடுத்து ஊரடங்கைத் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிர ஆலோசனையில் இருக்கின்றன.

இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கூட பொதுப் போக்குவரத்து இயக்கப்படுதலை சில நிபந்தனைகளோடு செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கோட்டையில் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கடந்த மே 6 ஆம் தேதி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அனைத்து போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதன்படி, பேருந்துகள் அனைத்தும் 50 சதவிகித பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் பணியில் ஈடுபடுவதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்துதான் பணியில் ஈடுபட வேண்டும். சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இருக்கைகளில் இடைவெளி விட்டு எண் குறிப்பிட வேண்டும். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அல்லது துணியால் முகத்தை மூடியிருக்க வேண்டும். பேருந்தின் ஜன்னல்கள் அனைத்தும் கட்டாயம் திறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பயணிக்கும் இடையே 6 அடி தூரம் இடைவெளி பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், பேருந்துகளில் சில்லரை பணப் பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும். இதற்காக மாத பேருந்து பயண அட்டை, தின அட்டை ஆகியவற்றை விநியோகிக்கும் இடங்களை கூடுதலாக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத் தலைவர் ஆர்.எம். சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கு, மே 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும், ஊரடங்கிற்குப் பிறகு பயணிகளின் பாதுகாப்புக்கு என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போக்குவரத்துத் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வரும் ஜூன் 1 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், ஜூன் 3 ஆம் தேதிமுதல் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுதும் முதல் கட்டமாக 50 சதவிகிதப் பேருந்துகளை இயக்குவது என்றும், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பேருந்துப் போக்குவரத்தை இயக்குவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடம் விவாதித்து வருவதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியிலும் அதிருப்தியிலும் இருப்பதாக கிடைத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

வேந்தன்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon