மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

ராஜீவ்காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவுக்கு பலி?

ராஜீவ்காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவுக்கு பலி?

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் உயிரிழந்ததாகச் சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அதற்கு மருத்துவமனை டீன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் 2ஆம் இடத்தில் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதிலும் சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அங்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு நோயின் வீரியம் தீவிரமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தால் அவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அதன்படி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் குறிப்பாகச் செவிலியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் தன்னலம் இன்றி அவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த நங்கநல்லூரைச் சேர்ந்த தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். உடல்நலக் குறைவால் கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகின. கடும் காய்ச்சல் காரணமாகத்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறும் நிலையில், மருத்துவமனையில் கொரோனா சோதனையும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சோதனை முடிவு வெளியாகவில்லை என்றும் இரு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தலைமை செவிலியருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் ‘கோவிட்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், தலைமை செவிலியர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் வலுத்துள்ளது.

ஆனால் மருத்துவமனை டீன் ஜெயந்தி இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எங்கேயோ தவறு நடந்துவிட்டது. மருத்துவ அறிக்கையில் கோவிட் என்று குறிப்பிடப்பட்டிருப்பது குறித்தும், யார் அவ்வாறு குறிப்பிட்டார் என்பது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு தலைமை செவிலியருக்கு, சிறுநீரக பாதிப்புடன் சர்க்கரை நோய் இருந்ததாகவும், அதனால் அவரை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் தலைமை செவிலியருக்கு கொரோனா நெருக்கடி காலத்தில் அதிகளவிலான பணி இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா நெருக்கடியால் ஏப்ரலில் பணி ஓய்வு பெறவிருந்த ஊழியர்களுக்கு மே 31 வரை பதவி நீட்டிப்பு செய்தது தமிழக அரசு. அதன்படி 58 வயதான தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா மார்ச் மாதம் இறுதியிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும். பணிக் காலம் நீட்டிக்கப்பட்டதால் அவர் மே 31ஆம் தேதி ஓய்வு பெற இருந்தார். ஆனால் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை பணி நீட்டிப்பு செய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் வீட்டில் ஓய்வு பெற்று உடல்நலத்துடன் இருந்திருப்பார், உயிரிழந்திருக்கமாட்டார் என்று செவிலியர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன. அதோடு செவிலியர்களுக்குப் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இன்று தலைமை செவிலியரின் உடலுக்கு சக செவிலியர்கள் மரியாதையையும், அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

-கவிபிரியா

வெள்ளி, 29 மே 2020

அடுத்ததுchevronRight icon