மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா?

எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா?

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்துள்ளது. இந்த நிலையில் மதுபானங்கள் அதிக விலையில் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவரான குல்லு படையாச்சி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

2003ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்கத் தடை விதிக்க வேண்டும். மது பாட்டிலில் விலைப் பட்டியலை ஒட்ட உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு, மதுபானங்களைக் கொள்முதல் செய்யும்போது அரசு அதைத் தரமானதா என்று சரிபார்த்து கொள்முதல் செய்கிறதா, இதற்கு ஆதாரம் ஏதேனும் உள்ளதா, இதுவரை மதுபானங்களை எப்படி கொள்முதல் செய்தீர்கள் என்று விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

அதுபோன்று அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? மதுபானங்கள் விற்கப்படும்போது ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபான கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? அதிக விலையில் விற்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதுபோன்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, இது தொடர்பாக ஜூன் 25ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

-கவிபிரியா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon