மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

வாயை மூடி இருங்கள் –ட்ரம்பிற்கு காவல் அதிகாரி அறிவுரை!

வாயை மூடி இருங்கள் –ட்ரம்பிற்கு காவல் அதிகாரி அறிவுரை!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர காவல்துறை தலைமை அதிகாரி ஆர்ட், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கடுமையான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் கவர்னர்களுக்கு கொடுத்திருக்கும் உத்தரவுகளை கேட்டதற்கு பிறகு ட்ரம்பிற்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஆர்ட். போலீசால் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்லாயிட் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்கள் குறித்து சமீபத்தில் கவர்னர்களிடம் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். கடந்த வாரம் அவரின் ட்விட்டர் பதிவில், ”எப்போது கலகம் தோன்றுகிறதோ, அப்போதே துப்பாக்கிச்சூடும் துவங்கும்” என்று கவர்னர்களுக்கு போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் வகையில் பதிவிட்டிருந்தார்.

ஜார்ஜ் காவல்துறையினர் ஒருவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற மினியபொலிசில் தொடங்கி அமெரிக்காவின் பல மாகாணங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு காவல் அதிகாரி கைது செய்யப்பட்டதுடன், 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 25ஆம் தேதி நடந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா போராட்டக் களமாக மாறி இருக்கிறது. போராட்டக்காரர்கள் பல கடைகளை சேதப்படுத்தியதுடன் காவல்துறையினரின் பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஆர்ட் , ”அமெரிக்க அதிபர் அவர்களே, என்னை ஒன்று மட்டும் சொல்ல விடுங்கள். இதை நான் ஒட்டுமொத்த நாட்டின் காவல்துறை தலைமை அதிகாரிகளின் சார்பாக சொல்கிறேன். முன்னேற்றங்களை ஏற்படுத்தும் விதமான கருத்துக்கள் எதையும் உங்களால் கூற முடியவில்லை என்றால், எதுவும் பேசாமல் வாயை மூடுங்கள் என்று சிஎன்என் செய்தி நிறுவனத்துடனான ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

திங்கள் கிழமை நடந்த வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவர்னர்களை வலுவில்லாதவர்கள் என்று கூறியிருந்தார். ஜார்ஜ் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால் இவ்வாறு கவர்னர்களை ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். நாட்டின் பாதுகாப்பு படையினரை கொண்டு போராட்டக்காரர்களை அடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மினியபொலிஸ் மாகாணத்தில் போராட்டக் காரர்களை அடக்கிய தேசிய காவல் படையை பாராட்டி பேசியதுடன், அவர்கள் வெண்ணையை வெட்டுவதை போல எளிதாக போராட்டக்காரர்களை அடக்கி இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இதன் மூலம் இன்னும் மோசமான யோசனைகளுடன் போராட்டக்காரர்களை அடக்குவதை அவர் ஊக்குவித்திருந்தார்.

“நீங்கள் அடக்க வேண்டும், ஒருவேளை நீங்கள் அடக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் உங்களை ஏறிமிதித்து சென்றுவிடுவார்கள். இறுதியாக நீங்கள் முட்டாள்கள் போல் இருக்க போகிறீர்கள், எனவே நீங்கள் தான் அடக்க வேண்டும்” என்று அந்த வீடியோ கான்பரன்சிங்கின் போது தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஆர்ட் , ”தங்களுடைய 20 வயது தொடக்கத்தில் இருக்கும் ஆண்களையும் பெண்களையும் அதிக அளவில் ட்ரம்பின் பேச்சு பாதித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இங்கு அடக்குமுறை தேவையில்லை, மனங்களை வெல்லுவது மற்றும் மூளையை வெல்லுவது மட்டுமே இங்கு தேவை. கருணைக்கும் வலுவின்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை நாள் நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டுவந்த இயல்பு நிலையை தங்களுடைய விழிப்புணர்வின்மையால் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் படத்தில் வரும் வசனமான ”உங்களுக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை என்றால், எதுவும் சொல்லாதீர்கள்’ என்ற வசனத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ளார் ஆர்ட். ஏனென்றால் இப்பொழுது தான் ஒரு தலைமையின் முக்கியத்துவம் எப்போதையும்விட அதிகமாக தேவைப்படுகிறது. இப்போதுதான் நீங்கள் அதிபராக இருப்பதற்கான தேவை அதிகமாக உள்ளது. இது ஹாலிவுட்டில் தயாரிக்கும் படம் அல்ல. உண்மை நிலை” என்று குறிப்பிட்டுள்ளார்

.

ஜார்ஜ் ஃபிலாயிடின் மீது டெரேக் எனும் காவல் அதிகாரி ஏறி மிதித்ததால் மூச்சு விட முடியாமல் அவர் உயிரிழந்தார். அப்போது அருகிலிருந்தவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் அந்த காவல்துறை அதிகாரி ஜார்ஜை விடவில்லை. பிறகு அந்த போலீஸ் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது மற்றும் மூன்று அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

- பவித்ரா குமரேசன்

செவ்வாய், 2 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon