மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 10 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: புலம்பெயர் தொழிலாளர்களின் அலைந்துழல்வு

சிறப்புக் கட்டுரை: புலம்பெயர் தொழிலாளர்களின் அலைந்துழல்வு

மு.இராமனாதன்

இந்த கொரோனா காலத்தில், இந்தியாவில் அதிக இன்னலுக்கு உள்ளானவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இவர்களது அலைந்துழல்வு இப்போது பேசு பொருளாகியிருக்கிறது. இவர்களது கையறு நிலை இன்றோ நேற்றோ ஏற்பட்டதல்ல. அந்தத் துயர் நெடுங்காலமாகப் புகைந்து கொண்டிருந்தது. இன்று பற்றி எரிவதால் பலரது கவனத்திற்கும் வந்திருக்கிறது.

இரண்டு விபத்துகள்

2017-18 காலகட்டத்தில் நான் சில மாதங்கள் மும்பையில் வசித்தேன். 2017 டிசம்பர் 17ஆம் தேதி விடியற்காலையில் மும்பையின் சாக்கி நாக்கா என்ற இடத்தில் ஒரு தீ விபத்து நடந்தது. அது இனிப்புகளும் நொறுக்குத்தீனிகளும் தயாரிக்கிற ஒரு தொழிற்சாலை. கீழ்த் தளத்தில் பற்றிய நெருப்பு, மேலேயிருந்த ஒரு பெரிய பரணையும் கவ்வியது. கீழ்த் தளத்தில் படுத்திருந்த ஒன்பது பேருக்குத் தப்பிப் பிழைக்க அவகாசம் இருந்தது. பரணில் படுத்திருந்த 12 பேரால் வெளியேற முடியவில்லை. மூச்சு முட்டி இறந்து போனார்கள். எல்லோரும் இளைஞர்கள். உத்தரப்பிரதேசத்தில் இருந்து வேலை தேடி மும்பை வந்தவர்கள். பணியிடத்திலேயே உண்டு உறங்கி வாழ்ந்து வந்தவர்கள். அடுத்த நாள், அந்தத் தொழிற்சாலை, சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்தது மாநகராட்சி. சுகாதாரம், தீயணைப்பு, உணவு, மருந்துக் கட்டுப்பாடு, தொழிலாளர் நலம் போன்ற துறைகளின் அனுமதியின்றியே அந்தத் தொழிற்சாலை இயங்கியிருப்பதாகவும், கட்டடத்திற்குள் இருந்த பெரிய பரணுக்கு மாநகராட்சியின் அனுமதி பெறப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. இறந்தவர்களின் உடலை ஏற்று வாங்க சிலருக்குச் சகோதரர்களும், சிலருக்கு உறவினர்களும், ஒருவருக்குத் தந்தையாரும் வந்திருந்தனர். பிணவறையின் முன் அவர்கள் காத்திருந்த படங்கள் பத்திரிகைகளில் வெளியாகின. அவர்களும் மாநகரத்தின் பிற பகுதிகளில் இதே போன்ற தின்பண்டத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள். அவர்களது தீனக்குரல் அடுத்தடுத்த நாட்களில் தேய்ந்து போனது. செய்தி முதல் பக்கத்திலிருந்து ஐந்தாம் பக்கத்திற்குப் போனது. பத்திகளும் மெலிந்தன. பிறகு நாளிதழ்களிலிருந்தும் மக்களின் மனசாட்சியிலிருந்தும் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் மறைந்து போயினர்.

இந்தச் சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு மாநகரில் இன்னொரு தீ விபத்து நடந்தது. இடத்தின் பெயர் பரேல். நகரின் வளமான பகுதி. ஒரு காலத்தில் நூற்பாலைகளால் மிகுந்திருந்த இடம். இப்போது பகட்டான வணிக வளாகங்களால் நிறைந்திருக்கிறது. கமலா மில்ஸ் அப்படியான வளாகம். நகரின் பிரபலமான உணவகமும் மது விடுதியும் அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்தன. நள்ளிரவு கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு உணவகத்தில் தீ பற்றிக்கொண்டது. பலரும் முண்டியடித்து வெளியேறினர். எல்லோராலும் வெளியேற முடியவில்லை. தற்காலிகக் கூரை இடிந்து விழுந்தது. 14 பேர் மூச்சு மூட்டி இறந்து போனார்கள். அனைவரும் இளைஞர்கள். பெரிய இடத்துப் பிள்ளைகள்.

அந்றைய தினமே மாநகராட்சி ஒரு வல்லுநர் குழுவை நியமித்தது. விபத்தை ஆய்வு செய்யப் பணித்தது. பக்கத்துக் கட்டடத்தில் இயங்கிய இதே போன்ற மொட்டை மாடி உணவகத்தில் சிலர் ஹூக்கா புகைத்தார்கள். ஹூக்காவில் கனன்று கொண்டிருந்த கரித்துண்டினின்றும் புறப்பட்ட தீப்பொறி காற்றில் பறந்து அருகாமை உணவகத்தின் அலங்காரச் சீலைகளில் பற்றிப் பரவியது என்று கண்டறிந்தது வல்லுநர் குழு. முறையான அவசரகால வாயில்கள் இல்லை என்பதையும் இன்னும் பல விதிமீறல்களையும் குழு எடுத்துரைத்தது. உணவக உரிமையாளர்களும் மேலாளர்களும் கைதாயினர். தீயணைப்பு, உணவுப் பாதுகாப்பு, கட்டட அனுமதி முதலான துறைகளுக்குப் பொறுப்பான மாநகராட்சியின் அலுவலர்கள் பத்துப் பேர் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவில் மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உரிய பாதுகாப்பும் அனுமதியுமின்றி இயங்கி வந்த இது போன்ற பல உணவகங்களின் உரிமங்கள் ரத்தாயின. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 28ஆம் தேதி மரித்தவர்களுக்கான நினைவேந்தல்களும் நடக்கின்றன.

இந்த இரண்டு விபத்துகளும் ஒரே நகரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்தவை. விதி மீறல்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இரண்டுக்கும் பொதுவானவை. ஆனால் இரண்டாவது சம்பவம் பல்வேறு நடவடிக்கைகளை ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இழந்த உயிர்களும் நினைவுகூரப்படுகிறது. முதல் சம்பவத்தில் மரித்தவர்களுக்கு நகரத்தின் நினைவு அடுக்குகளில் எந்த இடமும் கிடைக்கவில்லை; அவர்கள் அயலூர்க்காரர்கள்; வறியவர்கள்; அவர்களது குடும்பப் பின்னணிக்குப் பெருமைகளேதும் இல்லை. எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒப்பானதில்லை.

புலம்பெயர் தொழிலாளர் எத்தனை பேர்?

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, இந்தியாவில், அவர்கள் செய்யும் தொழிலை வைத்து மூன்றாகப் பிரிக்கலாம். ஒன்று, கட்டடத் தொழிலாளர்கள், இரண்டு விவசாயக் கூலிகள், மூன்று, உணவகங்கள், அங்காடிகள், சிறு-குறு தொழிலகங்கள் முதலானவற்றில் பணியாற்றும் உதிரித் தொழிலாளர்கள். அவர்களின் கல்வியறிவு குறைபட்டது. ஆதலால் கனரக, மின்னணுத் தொழில்களில் பயிற்சி பெற முடியாதவர்கள். அனைவரும் முறைசாராத் தொழிலாளர்கள். எந்தத் தொழிற்சங்கத்தின் கீழும் வராதவர்கள். மேலும், உள்ளூர் மொழி அறியாதவர்கள். வளம் குறைந்த மாநிலங்களில் இருந்து வளமான மாநிலங்களுக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். ஆதலால் கூலி மிகக் கேட்க மாட்டார்கள். பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் புளிமூட்டைகளைப் போல் தங்களை அடைத்துக் கொண்டு பயணம் செய்து கொள்வார்கள்.

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நான்கு கோடி என்கிறார்கள்; எட்டுக் கோடி என்கிறார்கள்; பத்துக் கோடி என்கிறார்கள். யாரிடத்திலும் சரியான கணக்கில்லை. அவர்கள் இதுகாறும் கிடைத்த கூடுகளில் ஒதுங்கி வாழ்ந்தார்கள். அவர்கள் சமூகத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்ற செல்வந்தர்களின் பார்வையிலும் நடுத்தர வர்க்கத்தினரின் பார்வையிலும் படவே செய்தார்கள். ஆனால் அவர்களும் இவர்களும் ஒன்றாகத் தேநீர் அருந்தியதில்லை; இரு சாரரின் பிள்ளைகளும் ஒரே திடலில் விளையாடியதில்லை. ஆகவே அவர்களின் துயரத்தின் மீது இத்தனை நாளும் இவர்களால் பாராமுகத்தோடு இருக்க முடிந்தது.

ஆனால், இன்று தாங்களே கட்டிய நெடுஞ்சாலைகளில் துரதிருஷ்டம் நிரம்பிய தலைச்சுமையோடு அவர்கள் நடக்கிற காட்சியைக் கடந்து போவது சிலருக்கேனும் பிராயாசையாக இருக்கிறது. ஜெயகாந்தன் எழுதினார்: 'உண்மை சுடும். சுடட்டுமே'. சுடுகிறது. அவர்களின் துயரம் சில பேரின் மனசாட்சியையேனும் உலுக்குகிறது. ஆதலால் இன்று பேசுபொருளாக ஆகிவிட்டிருக்கிறது.

இரண்டு நாடுகள்

நகரமயமாகிற நாடுகளில் எல்லாம் தொழிலாளர்கள் புலம்பெயரத்தான் செய்கிறார்கள். இமயமலையைத் தாண்டினால் எடுத்துக்காட்டு இருக்கிறது. இன்று உலகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கும் சீனா, உலகம் முழுமைக்குமான தொழிற்சாலையாக உருவெடுத்திருக்கிறது. தனது கதவுகளை உலக நாடுகளுக்கு அகலத் திறந்ததன் மூலம் 1978இல் இதற்கான தொடக்கம் குறிக்கப்பட்டது. அந்நிய மூலதனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. உலகத்தரமான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் சீனா உலகின் தொழிற்கூடமாவதில் பங்காற்றின. ஆனால் சீனாவின் முகத்தை மாற்றியவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். 2018ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இவர்களது எண்ணிக்கை 29 கோடி. அவர்களுக்கு அடிப்படைக் கல்வி இருந்தது. ஆதலால் நவீனத் தொழிற்பயிற்சி பெறுவது சாத்தியமானது. கனரகத் தொழில்களிலும் மின்னணு உற்பத்தியிலும் பங்காற்ற முடிந்தது. இந்தப் புலம்பெயர்வைச் சீனா திட்டமிட்டுத்தான் நிறைவேற்றியது. ஆனால், அதற்கு ஒரு விலை கொடுத்தது.

தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே நகரங்களுக்குப் புலம்பெயர முடியும். குடும்பத்தில் கணவனும் மனைவியும் புலம்பெயர்ந்தார்கள். பிள்ளைகளும் பெரியவர்களும் கிராமங்களில் தங்கினார்கள். நகராட்சிகள் தங்கள் உள்கட்டமைப்பை (பள்ளி, மருத்துவமனை, வீடுகள்) மேம்படுத்திய பிறகுதான் குடும்பம் முழுவதையும் நகரங்களுக்குள்ளே அனுமதிக்க முடியும் என்று சொல்லி வருகின்றன. இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள், நிறுவனங்கள் வழங்கும் உண்டு உறைவிடக் கூடங்களில் தங்கிக்கொள்வார்கள். ஒரு தொழிலாளிக்குக் குறைந்தது 200 சதுர அடி வசிப்பிடம் வழங்க வேண்டுமென்பது கணக்கு. ஆண்டுதோறும் மூன்று நீண்ட விடுமுறைகள் வரும். அக்டோபர் தேசிய தினம், பிப்ரவரி சீனப் புத்தாண்டு, மே தொழிலாளர் தினம். அப்போது இந்தத் தொழிலாளர்கள் வீடு நோக்கிச் செல்வார்கள். ரயில்களிலும் பேருந்துகளிலும் படகுகளிலும் அவர்களது இருக்கைகளைப் பதிவு செய்திருப்பார்கள். விடுமுறை முடிந்ததும் மீண்டும் நகரங்களுக்குப் பெயர்வார்கள். பெற்றோர்களின் அணுக்கமின்றி ஒரு தலைமுறையின் கணிசமான இளைஞர்கள் வளர்ந்துவிட்டார்கள்.

ஐந்தாண்டுகள் இருக்கும். சென்னையில் சில நண்பர்களைச் சந்தித்தேன். சீனா எப்படி உலகின் தொழிற்சாலையானது என்று பேச்சு திரும்பியது. நான் மேலேயுள்ள கதையைச் சொன்னேன். ஒரு நண்பருக்குக் கதை பிடிக்கவில்லை. ஒரு நாட்டில் யாரும் எங்கும் எப்போதும் போகிற உரிமை இல்லாவிட்டால் அது என்ன நாடு என்று கேட்டார். சீனா தனது புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குடும்பத்தை விட்டுப் பிரிப்பது நீதமாகாது என்றும் சொன்னார். உண்மை. ஆனாலும் சீனாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள் என்று சொன்னேன். நண்பருக்குச் சமாதானமாகவில்லை. அவருக்கு நான் ஒரு சம்பவத்தைச் சொல்ல விரும்பினேன். ஆனால் அவருக்குத் தவிர்க்க முடியாத வேலை இருந்தது. தனிப்பயிற்சி வகுப்புக்குப் போயிருந்த மகளை வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டும். ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

நண்பரிடம் நான் சொல்ல விரும்பிய சம்பவம் இதுதான். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஷென்ஜன் ஒரு தென் சீன நகரம். ஹாங்காங் எல்லையில் அமைந்திருக்கிறது. அங்குள்ள ஒரு சுற்றுலாத் தலத்தில் அந்த இளைஞரைச் சந்தித்தேன். பீகாரி. ஓர் இந்திய முகத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் அவராக வந்து பேசினார். துறைமுகத்தில் வேலை பார்க்கிறார். பகல்பூருக்குப் பக்கத்தில் பொதுப் போக்குவரத்தும் மின்சாரமும் இன்னமும் எட்டிப் பார்க்காத கிராமம் என்று சொன்னார். பெரிய குடும்பம். பசி. புறக்கணிப்பு. ஒரு முகவர் மூலம் சீனா வந்தார். வேலை எப்படி இருக்கிறது? கடுமையாகத்தான் இருக்கிறது. ஆனால் கண்ணியமாக நடத்துகிறார்கள். நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருக்கிறார். அங்கே இவருக்கு மட்டுமேயான கட்டில் இருக்கிறது. இதைக் கிராமத்தில் அவர் நினைத்துப் பார்க்க முடியாது. உடன் பணியாற்றும் சீனர்களைக் குறித்து மதிப்போடு பேசினார். மூன்று மாதத்தில் கிராமத்துக்குப் போகவிருக்கிறார். அதைச் சொன்னபோது அவரது கண்கள் மின்னின. நான் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டேன்.

அடுத்த பிறவியில் நீங்கள் சீனராகவோ, இந்தியராகவோ பிறக்கலாம் என்றால், உங்கள் தெரிவு என்னவாக இருக்கும்? கேள்வி சாதாரணமானதுதான். ஆனால் அந்த பகல்பூர்கார் சொன்ன பதில் நான் முற்றிலும் எதிர்பாராதது. கண்களை மூடி யோசித்துவிட்டு வார்த்தை வார்த்தையாகச் சொன்னார்: ஏழையாகப் பிறந்தால் சீனாவில் பிறக்க விரும்புவேன். செல்வந்தனாகப் பிறக்கக் கூடுமென்றால் இந்தியாவில் பிறக்க விரும்புவேன்.

மும்பை சாக்கி நாக்கா தின்பண்டத் தொழிற்சாலையில் பணியாற்றிய இளைஞர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க முடியாது. அவர்களில் யாரும் சீனாவைப் பார்த்ததில்லை. ஆனால், அடுத்த பிறவியில் யாராகப் பிறப்பது என்கிற தேர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்களில் யாரும் புலம்பெயர் தொழிலாளராக வேண்டும் என்று விரும்பியிருக்க மாட்டார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:

மு.இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: [email protected]

புதன், 3 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon