மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஸ்நாப் சாட்டில் ட்ரம்புக்குத் தடை!

ஸ்நாப் சாட்டில் ட்ரம்புக்குத் தடை!

ஸ்நாப் சாட் என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற, ஒரு நாளைக்கு 22 கோடி பேரால் பயன்படுத்தப்படும் மல்டி மீடியா செயலி. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தொடர் ட்விட்டுகள் இனவெறியை ஊக்குவிப்பதாக இருப்பதாக குற்றம் சாட்டிய ஸ்நாப் சாட், தனது செயலியில் ட்ரம்பின் இடுகைகளை, கருத்துகளை புரமோட் செய்ய முடியாது என்று ஜூன் 3ஆம் தேதி அறிவித்துள்ளது.

ட்ரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துகள் வன்முறையைத் தூண்டக்கூடும் என்று தீர்மானித்த பின்னர், அவருக்கு எதிராக ஒரு சமூக ஊடக நிறுவனம் மேற்கொண்ட கடுமையான நிலைப்பாடாக இது பார்க்கப்படுகிறது.

உலகம் எங்கும் இளைஞர்களிடம் பிரபலமான ஸ்நாப் சாட், “எங்கள் செயலியில் ட்ரம்பின் கணக்கு அப்படியே இருக்கும். ஆனால், செய்தி மற்றும் கன்டென்ட்டுகளுக்காக எமது முகப்பு பக்கத்தில் இனி ட்ரம்ப் விளம்பரப்படுத்தப்பட மாட்டார்” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு போலீஸாரின் காலால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட பிறகு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டங்களுக்குத் தீய நாய்கள் அச்சுறுத்தும் ஆயுதங்களை அனுப்புவதாக ட்விட்டரில் அச்சுறுத்தியிருந்தார் ட்ரம்ப். எனவேதான் கணக்கை முன்னிலைப்படுத்துவதை நிறுத்த முடிவு செய்ததாக ஸ்நாப் சாட் கூறியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் இதே காரணத்துக்காக அதிபர் ட்ரம்பின் ட்விட்டுகளுக்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவில் போராட்டக்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்ற ட்ரம்பின் ட்விட்டர் பதிவின் மேற்பதிவில், ‘இது ட்விட்டரின் நெறிமுறைகளுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் பதிவு’ என்று அறிவித்தது ட்விட்டர் நிறுவனம். இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்டுகளுக்கு அருகே அதன் உண்மைத் தன்மையைச் சோதிக்கும் விதமாக, அந்தப் பதிவு குறித்த சிஎன்என் செய்தியை பதிவிட்டது ட்விட்டர். சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கும் ட்ரம்புக்கும் பல காலமாக வார்த்தை போர்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ட்ரம்பின் பதிவுகளுக்கு உண்மைத்தன்மையைக் காட்டும் விதமான லிங்க்குகளை ட்விட்டர் பதிவு செய்வது இதுவே முதன்முறையாகும்.

இந்த நிலையில் ட்விட்டரை அடுத்து சமூக தளச் செயலியான ஸ்நாப் சாட்டும் ட்ரம்புக்கு எதிரான முடிவெடுத்துள்ளது.

-வேந்தன்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon