மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கட்டணம்: ஐஎம்ஏ பரிந்துரை!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கட்டணம்: ஐஎம்ஏ பரிந்துரை!

கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளின் கட்டண விவரங்களைத் தமிழக அரசுக்கு ஐஎம்ஏ தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலித்தது அம்பலமானது. டைம்ஸ் நவ் டெபுட்டி நியூஸ் எடிட்டர் சபீர் அகமது மற்றும் ஷில்பா ஆகியோர் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்த விவகாரம் வெளியில் வந்தது. பிபிஇ உடைக்கு நாளொன்றுக்கு ரூ.10,000, வெண்டிலேட்டருக்கு ரூ. 1.25 லட்சம், அட்வான்ஸ் பணமாக ரூ.3 லட்சம் என நோயாளிகளுடன் நாளொன்றுக்கு லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழக அரசு கட்டணங்களை வரைமுறைப்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளைப் பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அதிகளவு கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளின் கட்டண விவரங்கள் குறித்த பரிந்துரையைத் தமிழக அரசுக்குத் தமிழக ஐஎம்ஏ பிரிவு அனுப்பியுள்ளது. அதில், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு 17 நாட்களுக்கு ரூ.4,31,411ஐ கட்டணமாக வசூலிக்கலாம்.அதன்படி நாளொன்றுக்கு ரூ.43 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரியவருகிறது. மேலும், சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களைத் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9,600 வரை வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று லேசான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு 10 நாட்களுக்கு ரூ.2,31,820-ஐ கட்டணமாக வசூலிக்கலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களைத் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9,600 வரை வசூலிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தனியார் மருத்துவமனைகளில் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஐஎம்ஏ பரிந்துரையிலும், லட்சக்கணக்கில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது, சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-கவிபிரியா

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon