மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ஜெ. அன்பழகன் உடல்நிலை: அமைச்சர் அவசர ஆலோசனை!

ஜெ. அன்பழகன் உடல்நிலை: அமைச்சர் அவசர ஆலோசனை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவ ஆய்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

ஜெ. அன்பழகனின் உடல் நிலை பற்றி நேற்று (ஜூன் 3) மின்னம்பலம். காமில் முதலில் தகவல் வெளியானது. அதன் பின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சென்னை மண்டலத்தின் சிறப்பு அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,. நேற்று (ஜூன் 3) ரேலா மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசினார். ‘அன்பழகன் சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு எந்த உதவியும் செய்யத் தயாராக இருக்கிறது’ என்று அவர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் உடல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசிய முதல்வர், “அன்பழகன் உடல் நிலை குறித்து மருத்துவமனையிடம் பேசுங்கள். அரசின் சார்பில் என்ன உதவி வேண்டுமானாலும் உடனடியாக செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை மண்டல கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணனிடம் பேசியிருக்கிறார். அன்பழகன் உடல் நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் சென்னை மாநகராட்சிக்கு வந்த ரிப்போர்ட்டுகளை ஆராய்ந்தார். அதன் பின் ரேலா மருத்துவமனை மருத்துவர்களிடமும், ரேலா மருத்துவமனை நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி.யிடமும் பேசியிருக்கிறார் அமைச்சர்.

‘ஜெ. அன்பழகனுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை தொடர்பாக எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம். முதல்வரும் அக்கறையோடு விசாரித்து வருகிறார். தேவைப்பட்டால் தமிழக அரசில் பணியாற்றும் ஸ்பெஷலிஸ்டுகளையும் உடனடியாக ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்த உதவிக்கு வேண்டுமானாலும் அரசிடம் நீங்கள் எப்போதும் அணுகலாம்’ என்று அக்கறையோடு பேசியுள்ளார். மேலும் அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ரேலாவிடமும் சிகிச்சை முறைகள், அன்பழகனின் உடல் நிலை குறித்து விரிவான ஆலோசனையும் மேற்கொண்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இதற்கிடையே ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். திமுகவின் சென்னை சட்டமன்ற உறுப்பினர்களான மா.சுப்பிரமணியம், சேகர்பாபு ஆகியோரிடமும் அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்து, அரசுத் தரப்பில் இருந்து எவ்வித உதவியும் செய்யத் தயார் என்றும் கூறியுள்ளார்.

ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் காப்பாற்றுவதில் டாக்டர் ரேலா, அதிக வெற்றிவிகிதத்தை தன் மருத்துவ சிகிச்சை வரலாற்றில் பதிவு செய்துள்ளவர். அவரது தலைமையில் ஜெ. அன்பழகனுக்கு ரேலா மருத்துவமனையில் தீவிர தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-வேந்தன்

ஜெ.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை: ஹெல்த் ரிப்போர்ட்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon