மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

தகவல் சரிபார்ப்பு: இறந்துபோன யானைக்கு வெடி வைக்கப்பட்ட பழம் ஊட்டப்பட்டதா?

தகவல் சரிபார்ப்பு: இறந்துபோன யானைக்கு வெடி வைக்கப்பட்ட பழம் ஊட்டப்பட்டதா?

நேற்று சமூக ஊடகங்களில் வெகுவாக பகிரப்பட்டதில் ஒன்று 15 வயதுள்ள கர்ப்பிணி யானை வெடி புதைக்கப்பட்ட அன்னாசி பழத்தை உண்டதால் மிக மோசமான மரணத்தை எட்டியது தான்.

சமூக ஊடகங்களில் அந்த யானைக்கு வெடி புதைக்கப்பட்ட அன்னாசி பழத்தை ஊட்டியதால் அந்த கர்ப்பிணி யானை இறந்ததாகத் தகவல் பரவியது!

தகவல் சரிபார்ப்பு

கொட்டொபடம் கிராமப் பஞ்சாயத்துக்குட்பட்ட திருவிழம்கண்ணு வனச் சரகத்தில் இருக்கும் வெள்ளையாற்றில் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி காயமடைந்த நிலையில் தத்தளித்து கொண்டிருந்தது. இரண்டு கும்கி யானைகள் மூலம் காயமடைந்த யானையை உயிருடன் மீட்க முயற்சி செய்தனர் வனத்துறையினர். முயற்சி பலனளிக்காமல் அந்த யானை இறந்து போனது.

காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வெடி வைக்கப்பட்ட பழத்தினை இந்த யானை உட்கொண்டிருக்க வேண்டும். காயங்களில் புழுக்கள் இருந்ததால், காயம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாக இருக்கக்கூடும். காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் கடந்து வந்திருக்கிறது என்று வனவிலங்கு அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆபிரகாம் ஊடங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதே யானை கடந்த மே 23 ஆம் தேதி பாலக்காடு பகுதியில் உள்ள அம்பலப்பாரா பகுதியில் காணப்பட்டதாகவும், பாலக்கட்டு பகுதியில் பொதுவாக விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கொல்வதற்காக பழங்களில் வெடி மருந்தை வைப்பதை அப்பகுதி விவசாயிகள் வழக்கத்தில் வைத்துள்ளனர். இந்தமுறையில் யானை இறப்பது இதுவே முதல் முறை என்று வனச் சரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காட்டுப் பன்றிகளை கொல்வதும் சட்ட ரீதியாக தவறு என்றாலும் பயிர்களை காக்க அப்பகுதி விவசாயிகள் இந்த வழக்கத்தினைப் பின்பற்றி வருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பரவி வருவது போல இறந்த கர்ப்பிணி யானைக்கு வெடிவைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை மக்கள் ஊட்டி இருப்பார்களா என்ற கோணத்தில் வனத்துறை அதிகாரி திரு சாந்தாராம் (ஐஎஃப்எஸ்) அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, காட்டு யானைகளுக்கு யாரும் ஊட்ட முடியாது என்றத் தகவலைத் தந்தார்.

கிடைக்கப்பட்ட தகவல்களில் இருந்து காட்டு யானைக்கு மனிதர்கள் யாரும் உணவளித்திருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் மக்கள் உணவளித்ததாகப் பகிரப் படும் தகவல் பொய்யானது!

-முரளிகிருஷ்ணன் சின்னதுரை

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon