மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ஊரடங்கில் அதிவேகம்: விபத்துகளில் 262 பேர் பலி!

ஊரடங்கில் அதிவேகம்: விபத்துகளில் 262 பேர் பலி!

பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலமான ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் 262 பேர் சாலை விபத்துகளில் பலியாகினர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை நடந்த சாலை விபத்துகளில் 2,375 பேர் உயிரிழந்துள்ளனர். 2,197 சாலை விபத்துகளின் விளைவாக இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலைகள் காலியாக இருந்ததால் ஊரடங்கின்போது ஏற்பட்ட பெரும்பாலான விபத்துகள் வாகனங்களை அதிவேகமாக இயக்கியதால் நிகழ்ந்துள்ளன. போக்குவரத்துப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர், “ஊரடங்கின்போது சாலைகளில் வாகனங்கள் குறைவாகத்தான் சென்றன. இருந்தாலும், சாலைகள் காலியாக இருந்ததால் மக்கள் வாகனங்களை வேகமாக இயக்க ஆரம்பித்தனர். இதனால்தான் பெருமளவில் விபத்துகள் நிகழ்ந்தன. எனினும், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்துகள் அதிகம் இல்லை. பெரும்பாலான விபத்துகள் சாலையோரத் தடுப்புகளில் மோதியதாலும், மின் கம்பங்களில் மோதியதாலுமே நிகழ்ந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1ஆம் தேதி திங்கட்கிழமை மட்டும் மாநிலம் முழுவதும் 16 சாலை விபத்துகளில், 17 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. விபத்துக்குள்ளானவை பெரும்பாலும் இருசக்கர வாகனங்களே. கடந்த 5 மாதங்களில் அதிகபட்சமாக ஜனவரியில் 771 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரியில் 732, மார்ச் மாதத்தில் 610 பேர் பலியாகினர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஏப்ரலில் 119 பேரும், மே மாதத்தில் 143 பேரும் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவு டிஜிபி பிரமோத் குமார் கூறுகையில், “சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இது காவல்துறை, போக்குவரத்து மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சி. எதிர்மறை விமர்சனங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்” என்று தெரிவித்தார்.

எழில்

தகவல்: தி இந்து

புதன், 3 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon