மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கொரோனா சிகிச்சைக் கட்டணம்: முதல்வர் முக்கிய அறிவிப்பு!

கொரோனா சிகிச்சைக் கட்டணம்: முதல்வர் முக்கிய அறிவிப்பு!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, இன்று (ஜூன் 4) தமிழக அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கூட தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் லாப நோக்குடன் செயல்பட்டு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. ஒரு சில மருத்துவமனைகள் முன்பணமாகவே மூன்று லட்ச ரூபாய் வசூலிப்பதும் தெரியவந்தது.

இந்த தகவல் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழக பிரிவு இன்று காலை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் பரிந்துரை ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியது.

அதில், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு 17 நாட்களுக்கு ரூ.4,31,411ஐ கட்டணமாக வசூலிக்கலாம். லேசான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு 10 நாட்களுக்கு ரூ.2,31,820-ஐ கட்டணமாக வசூலிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த கட்டணமும் லட்சக்கணக்கில் இருப்பதாக அரசுக்குச் சென்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் அனைத்து சேவைகளுக்கான தொகுப்பு கட்டணம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் பொது வார்டில் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம், அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டணம் a1 மற்றும் a2 கிரேடுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலும், a3 மற்றும் a4 கிரேடுக்கு 9000 ரூபாய் முதல் 13,500 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கலாம் என்று தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தைக் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதோடு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்த பட்சம் 25 விழுக்காட்டை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க வேண்டும்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக, கூடுதல் கட்டணத்தைச் செலுத்தக் கூறும் தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.

மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கவிபிரியா

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon