மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

அடுத்து ஒரே நாடு, ஒரே சந்தை!

அடுத்து ஒரே நாடு, ஒரே சந்தை!

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் நேற்று (ஜூன் 3) கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரகாஷ் ஜவடேகர், “விவசாயிகள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் வரலாற்று ரீதியிலான திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் விளைபொருட்களைத் தடையின்றி விற்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க வழிகாட்டுதல்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரித்து, அதன் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதால் வேலைவாய்ப்புகள் பெருகும்” என்று தெரிவித்தார்.

நாம் அனைவரும் ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்தை நோக்கி நகர்கிறோம் என அறிவித்த ஜவடேகர், “விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விரும்பியவர்களுக்கு விற்கலாம். விவசாயிகள் இதை நீண்ட காலமாக விரும்பினர். நாங்கள் அதை செய்கிறோம். விவசாயிகள் இப்போது விவசாய உற்பத்தி சந்தைக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கிடைக்கக்கூடிய அல்லது வழங்கப்படும் மிக உயர்ந்த விலையில் விற்க அவர்களுக்கு இப்போது சுதந்திரம் உள்ளது” என்றும் கூறினார்.

மேலும், “காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து இனி அகற்றப்படும்.

விவசாய விளைபொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்பதால் அதற்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அத்தியாவசியப் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டம் தற்போது அமலில் உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள விளைபொருட்களைப் பிற மாநிலங்களில் சென்று விற்பனை செய்ய தடை உள்ளது. சட்டத் திருத்தம் மூலம், விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை சூழல் தாராளமயமாக்கப்படும்” என்றும் ஜவடேகர் குறிப்பிட்டார்.

எழில்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon