மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

போலிச் செய்தி: கேரள யானை விவகாரம் – இரண்டு இஸ்லாமியர்கள் கைது!

போலிச் செய்தி: கேரள யானை விவகாரம் – இரண்டு இஸ்லாமியர்கள் கைது!

வெடிபொருட்கள் புதைக்கப்பட்ட பழத்தை உட்கொண்டு இறந்து போன யானை விவகாரத்தில் இரண்டு இஸ்லாமியர்கள் கைது என்று பரப்பபடும் தகவல் போலியானது.

நேற்று இரவு 10.25க்கு அமர் பிரசாத் ரெட்டி என்பவரின் டிவிட்டர் கணக்கிலிருந்து ஒரு கீச்சு தொடர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் முதன்மையான கீச்சு அஜ்மத் அலி மற்றும் தமீம் ஷேக் ஆகிய இருவர் யானை கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவில் கைது செய்யப்பட்டதாகவும். கேரள முதலமைச்சர் இவ்விவகாரத்தில் மதம், ஜாதி, இனம் என்ற அடிப்படையில் கருணை காட்டாமல் வெளிப்படைத் தன்மையான விசாரணை வேண்டும் என்ற கீச்சினை பிரதமர் அலுவலகத்தையும், பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கையும் இணைத்துப் பதிவு செய்திருந்தார்.

அக்கீச்சு 13.5 ஆயிரம் விருப்பங்களையும், 8.5ஆயிரம் மறுக்கீச்சுகளும் காலை 7.46 மணிக்குப் பெற்று இருந்தது. யானைக்கு வெடிவைக்கப்பட்ட பழம் ஊட்டப் பட்டதா என்ற தகவல் சரிபார்ப்பினை நேற்று மின்னம்பலத்தில் வெளியிட்டு இருந்தோம். அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டிருக்கும் தகவலின் உண்மைத் தன்மையை அறிய இவ்வழக்கினை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில். இதுவரை யாரையும் இவ்வழக்குத் தொடர்பாக கைது செய்யவில்லை என்றும், யானை இறந்தது தான் மலப்புரமே தவிர, வெடிவைக்கப் பட்ட பழத்தை அங்கு உண்ணவில்லை. அந்த யானைக்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டதால் இரண்டு வாரங்களாக உணவு உட்கொள்ள வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி பாலக்காடு அம்பலபாராவில் இந்த யானை சுற்றித் திரிந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த யானை வெள்ளையாற்றில் இறந்தது மே 27 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கீச்சின் தொடர்ச்சியில் அமர் பிரசாத் ரெட்டி ஜூன் 3 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டு நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதாகவும், ஆதாரம் கேட்பவர்கள் கேரள முதலமைச்சரை முதல் தகவல் அறிக்கையை வெளியிடச் சொல்லுமாறு பதிவிட்டு இருக்கிறார்.

இதில் ஜூன் 3 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது வரை மட்டுமே உண்மை. மேலும் அவர் குறிப்பிடும் இரண்டு நபர்களை யார் விசாரிக்கிறார்கள் என்ற தகவல் தெளிவாகச் சொல்லாமல் பொதுவாக மக்களை நம்ப வைப்பதற்காக அப்படியான வரியை சேர்த்து இருக்கிறார்.

இப்படி போலியானத் தகவல் இடும் இந்த அமர் பிரசாத் ரெட்டி யார் என்று அவர் டிவிட்டர் சுயவிவரக் குறிப்பைப் பார்க்கும் போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சரின் ஊடக ஆலோசகர் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

வெடிமருந்து புதைக்கப்பட்ட பழத்தை உட்கொண்டு யானை இறந்து போன விவகாரத்தில் இரண்டு இஸ்லாமியர்கள் கைது என்ற தகவல் போலியானது

முரளிகிருஷ்ணன் சின்னதுரை

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon