மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கட்டணம்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கட்டணம்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தில், கோவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தயாரா என்று உச்ச நீதிமன்றம் தனியார் மருத்துவமனைகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் செயல்படும் சில கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள், கொரோனா காலத்தை லாப நோக்குடன் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வழக்கறிஞர் சச்சின் ஜெயின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனியார் மருத்துவமனைகளில் அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும்பாலான கோவிட் நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை அணுக முடியாத நிலையில் இருக்கின்றனர். எனவே, குறைந்த கட்டணம் அல்லது நோயாளிகளால் முடிந்த அளவுக்குக் கட்டணத்தைச் செலுத்தும் வகையில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 5), தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களுக்குச் சுகாதார பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தயாரா?" என்று தனியார் மருத்துவமனைகளுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசால் வழங்கப்பட்ட சலுகை நிலங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட நோயாளிகளுக்கு ஏன் இலவசமாகச் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அனைத்து தனியார் மருத்துவமனைகளிடமும் இந்த கேள்வியை எழுப்பவில்லை. பலன் பெற்ற மருத்துவமனைகளிடம் மட்டுமே கேள்வி எழுப்பப்படுகிறது என்றும் குறிப்பிட்டனர்.

இன்றைய விசாரணையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்காகப் பணம் செலவழிக்க முடியாத மக்களுக்காக சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

அப்போது, வழக்கறிஞர் சச்சின் ஜெயின் ஆஜராகி, மத்திய அரசு குடிமக்கள் பக்கத்தில் துணை நிற்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுடன் அல்ல” என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு வேறு ஒரு அமர்வில் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

முன்னதாக, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் கீழ் உள்ள பயனாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டது. அதோடு, பொது வார்டில் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம், அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம் a1 மற்றும் a2 கிரேடுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலும், a3 மற்றும் a4 கிரேடுக்கு 9000 ரூபாய் முதல் 13 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கலாம் என்று தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டண நிர்ணயம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon