மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

நடப்பு ஆண்டில் புதிய திட்டங்கள் இல்லை!

நடப்பு ஆண்டில் புதிய திட்டங்கள் இல்லை!

நடப்பு நிதியாண்டில் எந்தவொரு புதிய திட்டத்திற்கும் அனுமதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக முடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவில் நிதி தேவைப்படும் என்பதால் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2020-21, 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் சம்பளம் 30 சதவிகிதம் குறைக்கப்படுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரத் தொகுப்புத் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மேலும் அதிகமாக செலவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் எந்தவொரு புதிய திட்டத்தையும் தொடங்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் அனைத்து அமைச்சகங்களையும் துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளது, மேலும், கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக நிதியை சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

எனினும் பிரதம மந்திரி ஹரீப் கல்யான் யோஜனா, ஆத்மா நிர்பார் பாரத் அபியான் திட்டம், மற்றும் வேறு சிறப்புத் தொகுப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவுத் துறையின் அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை இடைநிறுத்தம் செய்யப்படும். கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.

நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா காரணமாக மத்திய அரசிடம் இருக்கும் பொது நிதியை பயன்படுத்துவதில் மாற்றங்கள் செய்வது கட்டாயமாகியுள்ளது. தொடர்ந்து ஏற்பட உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப நிதிப் பங்கீடு மாற்றம் செய்யப்படும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் அறிவிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

எழில்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon