மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

60% இயற்கை சுவாசம்: முன்னேற்ற அன்பழகன்

60% இயற்கை சுவாசம்:  முன்னேற்ற அன்பழகன்

கொரோனா தொற்று காரணமாக சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவ ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் உடல்நிலை பற்றி அடுத்த கட்ட தகவல்கள் கிடைத்து வருகின்றன.

ஜெ அன்பழகன் எப்படி இருக்கிறார் என்று கேட்டு ரேலா மருத்துவமனை முன் சென்னை மேற்கு மாவட்ட திமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்களும் பொதுமக்களும் கூட நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். ரேலா மருத்துவமனை வாசலில் ஊரடங்கு நிலையிலும், அன்பழகனின் உடல்நிலை பற்றிய விசாரணைக்காக இன்று சற்று அதிகக் கூட்டம் வந்தது என்கிறார்கள்.

ஜூன் 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் உடல்நிலை பற்றி ஜூன் 4ஆம் தேதி மாலை ரேலா மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மூச்சுத் திணறலோடு அட்மிட் ஆன அன்பழகனுக்கு 80% செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 5) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல்நிலை பற்றி விசாரித்து அறிந்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முகமது ரேலா, “ அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 80% செயற்கை சுவாசம் தேவைப்பட்ட அவருக்கு இப்போது 45 சதவீதம் மட்டுமே செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. 15 வருடங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் அதற்கான மருந்துகளை ஜெ.அன்பழகன் எடுத்து விசாரிக்க என்பதால் பயந்தோம். தற்போதைய முன்னேற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

இன்று மாலை 7 மணி நிலவரப்படி ஜெ அன்பழகன் உடல்நிலை மேலும் சிறிது முன்னேற்றம் அடைந்து 40 சதவிகிதம் மட்டுமே செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகவும் 60% அளவுக்கு அவரே சுவாசிப்பதாகவும் மருத்துவ வட்டாரங்களிலிருந்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போது ஜெ அன்பழகனுக்கு மயக்க நிலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாசத்தில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில்... மயக்க மருந்து கொடுப்பதை படிப்படியாக குறைக்கவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுதில் 80 சதவிகித செயற்கை சுவாசம் தேவைப்பட்ட ஜெ. அன்பழகனுக்கு, தற்போது 40 சதவிகிதம் அளவே செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. 60% அவராகவே சுவாசித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால், அடுத்தடுத்த நாட்களில் ஜெ. அன்பழகனின் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறார்கள் மருத்துவர்கள்.

-வேந்தன்

வெள்ளி, 5 ஜுன் 2020

அடுத்ததுchevronRight icon