என்.எல்.சியில் தொடரும் விபத்துகள்: காரணம் இதுதான்!

public

என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் நேற்று (ஜூலை 1) பாய்லர் வெடித்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மே மாதம் நடந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் இறந்த சோகம் இன்னும் மறையாத நிலையில், இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தையும், அச்சத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.

இப்படித் தொடர்ந்து பாய்லர்கள் வெடித்து விபத்துக்கு உள்ளாவதற்கான காரணம் குறித்து என்.எல்.சி தொழிலாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்…

“1982ஆம் ஆண்டு இந்தியத் தொழில்நுட்பத்தில் பெல் நிறுவனத்துடன் இணைந்து பாய்லர் தயாரிக்கப்பட்டு இரண்டாவது அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த பாய்லரின் ஆயுட்காலம் 25 வருடங்கள்தான் என்ற நிலையில், 32 வருடங்களைக் கடந்து இயங்கி வருகிறது. அதாவது ஏழு வருடங்கள் கூடுதலாக இயக்கப்பட்டு, அதே அளவிலான மின்சாரத்தைக் குறையாமல் தயாரித்து வந்துள்ளனர்.

25 வருடங்களுக்குப் பிறகு அதன் இயக்கக் காலத்தை அதிகரிக்கும் விதமாக சர்வீஸ் செய்திருக்க வேண்டும். ஆனால், என்.எல்.சி நிர்வாகம் அவ்வாறு செய்யவில்லை. 22,000 தொழிலாளர்கள் இருந்த என்.எல்.சியில் தற்போது 13,000க்குக் குறைவான தொழிலாளர்கள்தான் இருக்கிறார்கள், ஆட்குறைப்பின் காரணமாகப் பராமரிப்பும் குறைந்து விட்டது.

ஆண்டுக்கு 1,500 கோடி லாபத்தை ஈட்டிவரும் என்.எல்.சி நிறுவனத்தில் அனல் மின் நிலையத்தை மேம்படுத்தாமல் அதற்கு என்று நிதி ஒதுக்காமல் ஒரிசா, ராஜஸ்தான், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு செலவிடுகிறது. ஊழலும் மலிந்துவிட்டது அதுவே விபத்துக்குக் காரணம்” என்று என்.எல்.சி அதிகாரிகள் மட்டத்தில் கூறுகிறார்கள்.

ஒப்பந்த தொழிலாளி சங்க நிர்வாகி அன்பழகன், “சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஆண்டுக்கு 45 நாட்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இப்போது ஆண்டுக்கு 20 நாட்கள் பராமரிப்பு செய்வதே அரிதாக இருக்கிறது. மேலும், முக்கியமான தொழில்நுட்ப வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தத் தொழிலாளிகள் மூலமாகச் செய்துவருகிறார்கள், அதிகாரிகளின் ஆடம்பர செலவுகளைக் குறைத்து அனல் மின் நிலையத்தைப் பராமரிப்பு செய்துவந்தால் சிறப்பாக இருக்கும். தற்போது நடந்த விபத்தில் இறந்துபோன ஆறு பேரும் குடும்ப நிலங்களையும் வீடுகளையும் அளித்து ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்” என்று குறிப்பிடுகிறார்.

சிஐடியூ நிர்வாகி வேல்முருகன் கூறுகையில், “பவர் டைரக்டர் ஷாஜி ஜான் இருக்கிறார். மெயின்டனன்ஸ் டைரக்டர் விக்ரம் இருக்கிறார். இவர்கள்தான் இயந்திரங்கள் தன்மை குறித்து கவனமுடன் கண்காணித்து வர வேண்டும். அதிகாரிகள் ஊழல் செய்வதில் கவனம் செலுத்தும் அளவுக்குப் பராமரிப்பில் கவனம் செலுத்தவில்லை. அனல் மின் நிலையத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. ஆனால், அது செயல்படுகிறதா என்று கவனிக்க அதிகாரிகளுக்கு நேரமில்லை” என்று குற்றம்சாட்டினார்.

பாய்லர் வால்வு, சேப்டிக் வால்வு, மேன்வால் மற்றும் எலெக்ட்ரானிக் இரு வால்வு உள்ளது. ஆட்டோமாட்டிக் வால்வு திறக்கவில்லை என்றால் அந்த யூனிட்டில் உள்ளவர்கள் மேன்வால் வால்வைத் திறந்திருக்க வேண்டும், அங்கே என்ன நடந்தது என்று இதுவரையில் தெரியவில்லை. தொடர் பாய்லர் வெடிப்புக்குச் சரியான பராமரிப்பு இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், ஊழல்கள் பல மடங்கு அதிகரித்துவிட்டதும் விபத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

**-எம்.பி.காசி, எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *