நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்!

public

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோரின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக இருந்த சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார்.

தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் இன்று மும்பையில் காலமானார். சரோஜின் மகள் சுகைனா கான் இந்த செய்தியை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார். நாற்பது ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்த இவர், கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கும் மேல் நடனம் அமைத்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோருடன் இவர் இணைந்து பணியாற்றிய பாடல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.

நிர்மலா நாக்பால் என்ற பெயரில் பிறந்த சரோஜ் கான், திரையில் நசரனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, நடன இயக்குநர் பி. சோஹன்லாலின் வழிகாட்டுதலின் கீழ் பின்னணி நடனக் கலைஞரானார். சில ஆண்டுகளாக உதவி நடன இயக்குநராக பணியாற்றிய பின், கீதா மேரா நாம் (1974) படத்தில் நடன இயக்குநராக பணியாற்றத் துவங்கினார்.

ஸ்ரீதேவி நடித்த மிஸ்டர். இந்தியா படத்தில் இடம்பெற்ற ஹவ்வா ஹவ்வா பாடலின் மூலம் கவனம் ஈர்த்த இவர், அதன் பின்னர் ஸ்ரீதேவியின் படங்களில் அடுத்தடுத்து பணியாற்றத் துவங்கினார். இதைத் தொடர்ந்து 1990களில் மாதுரி தீட்சித் உடனான நீண்டகால கூட்டணியை அமைத்துக் கொண்டார். இவர்கள் கூட்டணியில் புகழ்பெற்ற பாடல்களாக அறியப்படுவது, “ஏக் தோ டீன்”, “ஹம் கோ ஆஜ் கல் ஹை இந்திசார்”, “தக் தக் கர்னே லாகா”, “சோலி கே பீச் க்யா ஹை”, “ தம்மா தம்மா ”என பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

**சரோஜின் பிற பிரபலமான படங்கள்: தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, தால், வீர்-ஸாரா, பர்தேஸ், சோல்ஜர், டான், சவாரியா, தேவதாஸ், ஜப் வீ மெட், குரு, லகான், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ், கல்நாயக், சால்பாஸ், மணிகர்னிகா.**

மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சுவாசக் குறைபாடு பிரச்சினையால் கடந்த சனிக்கிழமை சரோஜ் கான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் கொரோனா சோதனை மேற்கொண்ட போது, இவருக்கு வைரஸ் தொற்று இல்லை என சோதனை முடிவுகளில் வந்தது.

சுவாசக் கோளாறுக்கான சிகிச்சை மட்டும் சரோஜ் கானுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார். சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும்,சுகைனா கான் என்ற மகளும் உள்ளனர். சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இவரின் நினைவஞ்சலிக் கூட்டம் 3 நாட்களுக்குப் பின் நடைபெறும் என்று சரோஜ் கானின் மகள் சுகைனா கான் தெரிவித்தார்.

**சரோஜ் கான் காலத்தின் கலைஞர்.** ஆண் ஆதிக்கம் செலுத்தும் திரைத்துறையில் பல சோதனைகளைக் கடந்தும் ஆளுமை நிறைந்த அவரது திறமையால் இந்தி சினிமாவில் கோலோச்சினார். அவரை நன்கு அறிந்தவர்கள் **அவர் எப்போதும் தன் மனதில் உள்ளதையே பேசினார் என்றும், அவரது அச்சமற்ற தன்மையை தன் வேலையில் பிரதிபலித்தார்** என்றும் கூறுகிறார்கள். சரோஜ் கானின் நடனம் நடிகைகளை வெறும் ஒப்புக்காக திரையில் உலவ விடாமல், பாடல்களின் மூலம் தனது நடன அசைவால் முழுமையான கலைஞர்களாக மாற்றினார். அதனாலேயே ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் போன்ற ஆளுமைகள் இவருடன் பணியாற்ற அதிகம் விரும்பினர்.

சரோஜ் கானுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை ஷில்பா ஷெட்டி, “ஒரு லெஜண்ட் எங்களை விட்டு விலகியுள்ளார். **நான் உங்களை முதன்முதலில் சந்தித்த தருணத்தை மறக்க முடியாது, நான் அழுதேன்(நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை) நீங்கள் உண்மையில் எனக்கு முன்னால் நிற்கிறீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை.** அப்போது என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருந்த ‘சுரேக் தில்’ வந்தது. ஒரு தொழில்நுட்ப வல்லுநராக சிறந்து விளங்கினீர்கள்…உங்களைப் போல பெண்களை யாரும் காட்சிப்படுத்த முடியாது. இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது” எனக் குறிப்பிட்டார்.

மாதுரி தீட்சித் தனது இரங்கல் அறிக்கையில், “எனது நண்பரும் குருவுமான சரோஜ் கானின் இழப்பால் நான் பேரழிவிற்கு உள்ளாகியிருக்கிறேன். **நடனத்தில் எனது முழு திறனை அடைய எனக்கு உதவியதற்காகவும் அவர் செய்த பணிக்காகவும் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.** உலகம் ஒரு அற்புதமான திறமையான நபரை இழந்துவிட்டது. சரோஜ் ஜி ஆரம்பத்தில் இருந்தே எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். அது நடனம் பற்றி மட்டுமல்ல. இந்த பெரும் தனிப்பட்ட இழப்பை நினைத்து என் மனம், பல நினைவுகளின் அவசரத்தில் இருக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்” எனக் கூறினார்.

சரோஜ் கான் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

**-முகேஷ் சுப்ரமணியம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *