சிறப்புக் கட்டுரை: தனியார் இயக்கும் ரயில்கள்: தடம் புரளும் ரயில்வே

public

ராஜன் குறை

இந்திய ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் ரயில் வண்டிகளை இயக்க தனியாரை அனுமதிக்க போவதாகச் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து இயல்பாகவே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. வழக்கம்போல இவ்விதம் செய்வது வசதியான பயணத்துக்கு வழி வகுக்கும், இந்திய ரயில்வேக்கு வருமானம் கிடைக்கும் என்பது போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. உயர் மத்திய தர வர்க்கத்துக்குப் பொதுவாகவே கொஞ்சம் அதிக பணம் கொடுத்தாலும் வசதியான பயணம் கிடைக்குமென்றால் மகிழ்ச்சிதான். அவ்வளவு பணம் செலவழிக்க முடியாதவர்கள் வழக்கமான ரயில்வே ஓட்டும் ரயிலிலே சென்று கொள்ளலாம் என்பதால் அவர்களுக்கும் பாதிப்பில்லை என்பதும் ஒரு வாதம். நகரப் பேருந்துகளில் குளிர்சாதன பேருந்துகள், வசதிகூடிய லக்சுரி பேருந்துகள் அதிக கட்டணத்துக்கு இயக்கப்படுவதைப் போலத்தான் இது என்பதும் பொதுப்புத்தியில் புரிந்துகொள்ளப்படுகிறது.

இதற்கு மறுப்பாக முக்கியமான வருவாய் தரக்கூடிய தடங்களில் தனியார் ரயில்கள் விட்டால், வருமானத்தின் பெரும்பகுதி அவர்களுக்குச் சென்று விடும். பிற வருவாய் அதிகம் வராத வழித்தடங்களில் ரயில்வே வண்டிகள் மட்டுமே செல்லும் என்னும்போது மெல்ல மெல்ல ரயில்வே நட்டத்துக்குத்தான் ஆளாகும் என்பது போன்ற அச்சங்களும் நிலவுகின்றன. பொதுத் துறையா, தனியார் துறையா எது நல்லது என்பதை எப்படித் தீர்மானிப்பது என்பது முக்கிய கேள்வியாகிறது.

தனியார் துறை என்பதற்கும் பொதுத் துறை என்பதற்கும் முக்கிய வேறுபாடு லாபம் என்ற அம்சம்தான். தனியார் ரயில்களை இயக்கினால் அவர்கள் சேவை நோக்கோடு மட்டும் இயக்க மாட்டார்கள். லாபம் ஈட்டும் நோக்கமும் முக்கியமாக இருக்கும். பொதுத் துறை என்பதில், குறிப்பாக அரசுத் துறை என்பது முழுவதும் சேவை நோக்கை அடிப்படையாகக் கொண்டது. பொது உடமை நாடுகளில் எல்லாமே அரசுத் துறையாக இருந்தால் தனியார் தொழில் என்பதே கிடையாது என்ற அளவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலீட்டிய நாடுகளில் எல்லாமே தனியார்தான். அரசு ராணுவம் மற்றும் பொது நிர்வாகத்தை மட்டுமே கவனித்துக்கொள்ளும் என்பது அணுகுமுறையாக இருந்தது. இரண்டும் இருவேறு தத்துவங்கள். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நேரு கலப்புப் பொருளாதாரம் என்பதை முன்வைத்தார். அரசுத் துறை, அரசு கணிசமாக முதலீடு செய்து, தன்னிச்சையான நிர்வாகம் கொண்ட பொதுத் துறை, தனியார் துறை என்று மூவகையான துறைகளும் இயங்கும் என்பதே கலப்புப் பொருளாதாரம்.

**அரசுடைமையாக்கலும், தனியாருடைமையாக்கலும்**

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வங்கிகள் தனியார் நட த்துபவையாகத்தான் இருந்தன. இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். அதன் மூலம் வங்கிகளை சமூக நலன் நோக்கில் கடன் வழங்குமாறு செய்ய முடிந்தது. அரசு பின்னாலிருப்பதால் அவை துணிந்து பொருளாதார வளர்ச்சிக்காக சிறு, குறு தொழில்களுக்கு கடன் கொடுப்பது சாத்தியமானது. வெறும் லாப நோக்கில் செயல்படாமல், பொதுநல நோக்கில் செயல்படுவது சாத்தியமானது.

இதேபோல தொலைபேசித் துறை அரசுத் துறையாக இருந்து பின்னர் பொதுத் துறையாக மாறியது. அரசுத் துறையாக இருக்கும்போது அது சேவை நோக்கில் இயங்குவது சாத்தியமாக இருந்தது. வருமானம் வருகிறதோ இல்லையோ நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் தொலைபேசி சேவை அவசியம் என்று கருதி செயல்பட முடிந்தது. தபால் துறையுடன் இணைந்து இருந்ததால் தந்தி, தொலைபேசி சேவைகளை கிராமப்புற தபால் நிலையங்களிலும் உருவாக்க முடிந்தது. தொலைதூர பொதுத் தொலைபேசிகள் என்ற திட்டத்தில் சிறிய கிராமங்களிலும் கூட பொதுத் தொலைபேசிகள் இருக்க வேண்டும் என்ற லட்சிய நோக்குடன் செயல்பட முடிந்தது. தொலைபேசித் துறை ஊழியர்கள் தங்கள் கோஷங்களில் “காட்டில் மேட்டில் கடும் குளிரில் கம்பம் நட்டு, கம்பி இழுத்து” என்று தங்கள் உழைப்பைக் குறிப்பிடுவார்கள். அதுபோல அந்தக் கால தொழில்நுட்பத்தில் கம்பங்களைப் பல காத தூரம் நட்டு அதன் மேல் கம்பியிழுத்துதான் தொலைபேசி இணைப்பைத் தர வேண்டும். இப்போது தொழில்நுட்பப் புரட்சியால் மின்காந்த அலைகளில் காற்றில் நேராக செல்பேசி எனப்படும் செல்போனுக்கு எந்த கம்பியும் இல்லாமல் ஒலி வந்து சேர்ந்துவிடுகிறது. ஆனாலும் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தொலைபேசித் துறை அரசுத் துறையாக இல்லாமல் இருந்தால் கிராமப்புறங்களுக்கு தொலைபேசி சென்றிருக்காது. வருமானம் கருதாத சேவையாக, மக்கள் நலன் சார்ந்ததாக அந்தத் துறை இயங்க முடிந்தது.

**எல்லா தொழில்களும் அரசுத் துறையாக முடியுமா?**

ஒரு முறை ஒரு நவீனமான பெரியதொரு கோழிப்பண்ணைக்கு நண்பருடன் சென்றிருந்தேன். அவர் அங்குள்ள ஏற்பாடுகளை கண்டு வியந்து ஏன் அரசே கோழிப்பண்ணைகளை நடத்தக் கூடாது என்று கேட்டார். நான் சட்டென்று அரசு நடத்தினால் நஷ்டம்தான் வரும் என்று கூறினேன். ஏனெனில் சற்று கவனக் குறைவாக இருந்தாலும் கோழிகளுக்கு நோய் வரும், இறந்துவிடும். பல்வேறு நுட்பமான பராமரிப்பும், கவனமும் தேவைப்படும் தொழில் அது. தனியார் நிர்வாகத்தில் நஷ்டத்தைத் தவிர்க்க வேண்டும், லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கும் அது முக்கியமானது என்றேன். அதே நேரம் அதிக லாப நோக்கு ரசாயனங்களின் பயன்பாடு ஆகியவற்றுக்கு இட்டுசெல்வது தீங்கானது. அதைக் கட்டுப்படுத்தலாமே தவிர, அரசே நடத்தினால் சரியான பராமரிப்பை உறுதி செய்வது கடினம்தான். அதேபோல் விவசாயமும் தனியார் முயற்சியாக இருப்பதுதான் சிறந்தது.

எந்த துறைகளில் அரசு நிர்வாகத்தால் உற்பத்தியில் போதுமான கவனத்தைச் செலுத்த முடியாது, எங்கே தனியாரின் எச்சரிக்கை மிக்க நிர்வாகமும், உழைப்பும் தேவையோ அந்தத் துறைகள் தனியாரிடம் இருப்பதுதான் சரியானது. எந்த துறைகளில் லாப நோக்கற்ற சேவை முக்கியமோ, எளிய மக்களுக்கு அந்த சேவை அத்தியாவசியமானதோ அந்த துறைகள் அரசுத் துறையாகவோ, பொதுத் துறையாகவோ இருப்பதுதான் சரியானது.

**ரயில் சேவைகள் என்பது மக்களுக்கானது**

ரயில் பயணம் என்பது மக்கள் அனைவருக்கும் அத்தியாவசியமானது. அது அரசிடம் இருக்கும் வரைதான் மக்கள் நலனை மனத்தில் கொண்டு இயங்க முடியும். அதில் மெல்ல, மெல்ல தனியார் பங்கேற்பை நுழைப்பது, அதிகரிப்பது என்பது எளிய மக்களுக்கு நன்மை பயப்பதல்ல. அது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதில்தான் சென்று முடியும். இந்தியா போன்ற சமூக ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் அது ஏற்றத்தாழ்வுகளை அதிகரிப்பதில் சென்று முடியும். எப்படி தனியார் பள்ளிகளின் பெருக்கம் அரசுப் பள்ளிகளைக் குறித்த சமூக அக்கறையைக் குறைத்துவிட்டதோ, அதுபோல தனியார் இயக்கும் ரயில்கள் அரசு இயக்கும் ரயில்கள் பற்றிய அக்கறையைக் குறைத்துவிடும். அதன்பின் அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து உயர் மத்தியதர வர்க்கமும், செல்வந்தர்களும் கவலைப்பட மாட்டார்கள். அதனால் மெல்ல ஊடக கவனமும் குறைந்துவிடும். அது மக்களுக்கான சேவைகளை பலவீனப்படுத்தும்.

ஏற்கனவே கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் தனியாரின் பங்கு கடுமையாக அதிகரித்து வருகிறது. தொலைபேசித் துறை தொழில்நுட்ப மாற்றங்களினால் தனியார் மயமாகிவிட்டது. பொதுத் துறையான பிஎஸ்என்எல் திட்டமிட்டு வலுவிழந்து போக வைக்கப்பட்டது. அடுத்து மின்சாரம், ரயில்வே போன்றவை தனியாரிடம் போவது என்பது இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு, எளிய மக்களுக்கு நன்மை பயப்பது அல்ல. இவை அரசுத் துறையாக, பொதுத் துறையாக முழுவதும் சேவை நோக்கில் இயங்குவது அவசியம்.

**கட்டுரையாளர் குறிப்பு**

கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *