சென்னையில் ட்ரிபிள் லாக் டவுன் கொண்டுவரப்படுமா?

public

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஜூலை 6 முதல் ஒரு வார கால ‘ட்ரிபிள் லாக் டவுன்’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் காசர்கோடு மாவட்டத்தில் தொற்றுப் பரவல் அதிகமானதால், அங்கே ட்ரிபிள் லாக் டவுன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை மூலம் மூன்று வாரங்களில் 94% தொற்று காசர்கோடு மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டது.இப்போது ட்ரிபிள் லாக் டவுன் திருவனந்தபுரத்தில் இன்று (ஜூலை 6) முதல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் நடமாட்டத்தை நிறுத்தவும், சுகாதார அதிகாரிகள் தொடர்பு தடமறிதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக நேரம் அனுமதிக்கும் வகையில் கேரள போலீஸ் செயல்படுத்தும் திட்டம்தான் ட்ரிபிள் லாக் டவுன். இதுபற்றி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

**சிங்கிள் லாக் டவுன்**

சிங்கிள் லாக் டவுன் என்பது மாநகரப் பகுதி முழுவதும் உள்ள மக்களின் நடமாட்டத்தைத் தடுப்பதற்கான ஒரு பொதுவான கட்டுப்பாட்டு உத்தி. நுழைதல், வெளியேறுதல் ஆகியவற்றுக்காக ஒரே ஒரு சாலையைத் தவிர, மற்ற அனைத்து சாலைகள் மற்றும் புறவழிச்சாலைகள் தடுப்புகளைப் பயன்படுத்தி மூடப்படும். பொது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே தனியார் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

ஹெல்ப் லைன் தொடர்பு கொண்டால் வீட்டு வாசலில் மளிகை பொருட்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். அத்தியாவசிய காரணங்களுக்காக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது அவர்கள் ஏன் வெளியே வருகிறார்கள் என்று கூறி கையொப்பமிடப்பட்ட அறிவிப்பு படிவங்களை கொண்டு செல்ல வேண்டும். போலீஸ் அதிகாரிகள் அத்தகைய ஆவணங்களை சரிபார்த்து, செல்லுபடியாகும் பட்சத்தில் அனுமதிப்பார்கள். சரியான காரணங்கள் இல்லாமல் மக்கள் பூட்டுதலை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் குற்ற வழக்குகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்து மக்களை ஏற்றிச் செல்லும் டாக்ஸிகள் செல்ல அனுமதிக்கப்படும். அரசு அலுவலகங்கள், மத இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும்.

**டபுள் லாக் டவுன்!**

இரண்டாவது பூட்டு என்பது மாநகரம் முழுதும் கவனம் செலுத்துவதோடு கொரோனா தொற்று இருக்கும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டும் கவனம் குவிக்கப்படுவதாகும். அந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கின்றனர். அங்கே போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்படும். யாரும் வெளியே வராத அளவுக்கு கண்காணிப்பு அதிகப்படுத்தப்படும்.

**ட்ரிபிள் லாக் டவுன்!**

மூன்றாவது லாக் டவுன் என்பது இன்னமும் ஜூம் செய்யப்படுகிறது. அதாவது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருக்கும் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம்நிலை தொடர்புகளின் குடும்பங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இவர்கள் மூலம் மேலும் ஒருவருக்குக் கூட தொற்று பரவக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் அந்த குடும்பத்தினர் மட்டும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். **அறிகுறியற்ற முதன்மை அல்லது இரண்டாம் நிலை தொடர்புகள் கண்டிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர். அத்தகைய வீடுகளுக்கு வெளியே எல்லா நேரங்களிலும் காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். அந்தப் பகுதியில் காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும். தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை சோதனை செய்யப்படுகிறார்கள். ட்ரோன்களின் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பராமரிக்கப்படுகிறது. முதல், இரண்டாம் நிலை தொடர்பில் இருப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் சென்றால் கூட , போலீசாருக்கு எச்சரிக்கை கிடைக்கும்.**

**இவ்வாறு மாநகரம், கட்டுப்பாட்டு மண்டலம், குறிப்பிட்ட வீடுகள் என்று மேலும் மேலும் கண்காணிப்பை மைக்ரோ அளவில் குவித்து தீவிரப்படுத்தும் முறையே ட்ரிபிள் லாக் டவுன் எனப்படுகிறது.** ஏற்கனவே சென்னையில் மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் கண்காணிப்புக் குவிப்பை அதிகப்படுத்தி கொரோனா தொற்றைச் சிறை பிடிக்கும் ட்ரிபிள் லாக் டவுன் சென்னையிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் சென்னையில் இன்றுமுதல் போக்குவரத்து, கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *