கொரோனா தொற்று: பச்சிளங்குழந்தையுடன் தவித்த பெண்!

public

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், அவரது பச்சிளங்குழந்தையுடன் அலைக்கழிக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

கோவில்பட்டி மந்தித்தோப்புச் சாலையைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்த 4ஆம் தேதி ஈராச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே 5ஆம் தேதி ஸ்கேன் பார்க்க தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, தண்ணீர் அளவு குறைவாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், மறுநாள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்துவிடலாம் எனத் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணின் பெற்றோர் 6ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மதியம் 12 மணிக்கு கொரோனா பரிசோதனை எடுத்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரித்துபோது, உங்களுக்கு மெசேஜ் வரவில்லையென்றால், ஒன்றும் பிரச்சினை இருக்காது எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு மதியம் 2 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், இரவு சுமார் 10 மணிக்கு அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனியார் மருத்துவமனை நிர்வாகம், அந்தப் பெண்ணையும், அவரது பச்சிளங் குழந்தையையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.

அதையடுத்து அந்த மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு 108 ஆம்புலன்ஸ் தூத்துக்குடியில் இருந்து வர வேண்டும் எனத் தெரிவித்தனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் 108 ஆம்புலன்ஸ் வந்தது. அதன் பின்னர் அந்தப் பெண்ணையும், பச்சிளங்குழந்தையையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, “அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால், எங்கள் பெண்ணுக்குச் சரிவர மயக்கம் கூட தெளியவில்லை. இதனால் இன்று இரவு மட்டும் இங்கு இருக்கட்டும். நாளை நாங்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றோம். ஆனால், அவர்கள் எங்களது பெண்ணையும் பச்சிளங்குழந்தையயும் அவசர அவசரமாக ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அரசு மருத்துவமனையிலும் அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் இல்லாமல், தூத்துக்குடியில் இருந்து வரும் வரை இரண்டு மணி நேரம் காத்திருந்து எங்களது பெண்ணை அனுப்பி வைத்தனர். பச்சிளங்குழந்தை, மயக்கம் தெளியாத பெண் என்று கூட பார்க்காமல் மூன்று மணி நேரமாக எங்கள் பெண் அலைக்கழிக்கப்பட்டார். இது வேதனையாக உள்ளது” என்றனர்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *