�கொரோனா பரவல்: இந்தியாவில் எட்டு மாநிலங்கள்… எட்டு மாநிலங்களில் 49 மாவட்டங்கள்!

public

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய அரசின் உயர்நிலை அமைச்சர்கள் குழுவின் கூட்டம் 18ஆவது முறையாக நேற்று (ஜூலை 9) காணொலிக் காட்சி முறையில் கூடியது.

ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் எஸ். பூரி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மத்திய ரசாயனங்கள், உரங்கள் மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் மன்சூக் மண்டாவியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் குழுவின் விவாதத்தில், இந்தியாவின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. உலக அளவில் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஐந்து நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 10 லட்சம் நபர்களுக்குத் தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கையானது மிகக் குறைவான அளவில் அதாவது 538 ஆக இருக்கிறது. அதேபோன்று 10 லட்சம் நபர்களுக்கு மரணம் ஏற்படும் எண்ணிக்கை 15 என்ற அளவில் மிகக் குறைவாகவும் இருப்பது தெரிய வருகிறது. இவற்றின் சர்வதேச சராசரி எண்ணிக்கை என்பது தொற்றைப் பொறுத்தளவில் 1,453 எனவும் இறப்பைப் பொறுத்தளவில் 68.7 எனவும் இருக்கிறது என்ற தகவல் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் எட்டு மாநிலங்களில் மட்டுமே இருக்கிறார்கள். மஹாராஷ்டிரம், தமிழகம், டெல்லி, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டுமே சுமார் 90 சதவிகிதத் தொற்றுள்ளவர்கள் உள்ளனர். அதேபோல இந்த எட்டு மாவட்டங்களிலும் 49 மாவட்டங்களில் மட்டுமே 80 சதவிகிதத் தொற்றுள்ளவர்கள் உள்ளனர் என்ற தகவலும் இந்தக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஏற்பட்ட மொத்த இறப்புகளில் மஹாராஷ்டிரம், டெல்லி, குஜராத், தமிழகம், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட மொத்த இறப்பு 86 சதவிகிதம் ஆகும். மொத்த இறப்புகளில் 80 சதவிகிதம், 32 மாவட்டங்களிலேயே நிகழ்ந்துள்ளது என்ற விவரங்களும் இந்தக் கூட்டத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

ஆக, இந்தியாவில் கொரோனா தொற்று என்பது தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மட்டுமே 90 சதவிகிதம் இருக்கிறது. இந்த எட்டு மாநிலங்களிலும் 49 மாவட்டங்களில் மட்டுமே 80 சதவிகிதப் பரவல் இருக்கிறது என்பது மத்திய அரசின் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

மேலும் இந்தக் கூட்டத்தில், “ஊரடங்கு தளர்வு 2.0 காலகட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் விதித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளுக்கேற்ப கட்டுப்பாட்டு மண்டலங்களைப் பிரிப்பது, தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளுக்குத் தீவிர கவனம் செலுத்தும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் இருக்கும். கட்டுப்பாட்டு மண்டலங்களை வலைதளங்களில் அறிவித்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களின் சுற்றளவை தீவிரமாகக் கண்காணித்தல் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே நடமாட்டத்தை அனுமதித்தல், தீவிரமாகத் தொடர்பு தடம் அறிதல், வீடு வீடாக ஆய்வு செய்தல் / கண்காணித்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள புதிய தொற்றாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பஃபர் மண்டலங்களை அடையாளம் காணுதல் ஆகியனவும் எதிர்கால நடவடிக்கைகளில் தீவிர கவனம் பெறும்” என்று தெரிவிக்கப்பட்டது.

மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்குப் பொது சுகாதார நிபுணர்களைக் கொண்ட குழுவினர் தொடர்ச்சியாக வருகை புரிகின்றனர். இந்தக் குழுவினர் தொற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிகத் திறம்பட மேற்கொள்ள மாநிலங்களுக்கு உதவியாக இருக்கின்றனர். அமைச்சரவை செயலாளர் தலைமையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களோடு காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் தொற்றைத் தடுத்தல், பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், இறப்பைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது என்று இக்கூட்டத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.

அதன்படியே இன்று (ஜூலை 10) ஒன்றிய அரசின் குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கிறார்கள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *