கொரோனா காலத்தில் கலெக்டரின் சிறப்பு நடவடிக்கை!

public

கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதும் கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு நிதியாக இரண்டு தவணையாக நான்கு கோடி ரூபாய் நிதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கினார் .

இதனை சில மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகச் செலவு செய்தார்கள். சில மாவட்ட ஆட்சியர்கள், பிடிஒ மூலமாகச் செலவு செய்தார்கள். ஆனால் அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அதாவது, நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சிகளில் ப்ளீச்சிங் பவுடர் போடாமல் வெறும் சுண்ணாம்புகளைத் தெளித்ததாகவும், வைரஸ் பரவாமலிருக்க பலவிதமான கெமிக்கல் கலந்த மருந்து அடிக்காமல் பெயர் அளவில் மருந்து அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், கொரோனா வார்டில் பணி செய்பவர்களுக்கு நல்ல உணவு, பழங்கள் வாங்கிக் கொடுக்கவும் , தனியார் விடுதிகளில் தங்க அறைபோட்டுக் கொடுக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசு ஒதுக்கிய நிதியைச் சரியாக கையாளாமல் பலமாவட்ட அதிகாரிகள், அமைச்சர், எம்எல்ஏக்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முதல்வர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்தார்.

சிறப்பு அதிகாரிகள் அவரவர்களுக்கு ஒதுக்கிய மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து ரிப்போர்ட்களை தலைமைச் செயலாளர் மூலமாக முதல்வருக்கு அனுப்பினர். உடனடியாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து சில அதிரடியான உத்தரவுகள் சென்றது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட சிறப்பு அதிகாரியும் விவசாயத் துறை செயலாளருமான ககன் தீப் சிங்பேடி ஐஏஎஸ் பரிந்துரையின் பேரில், கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சலாமூரி பல ஊழல் ஓட்டைகளை அடைத்து வருவதாகச் சொல்கிறார்கள் சில வட்டாட்சியர்கள்.

கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அதிகாரிகளை அழைத்த ஆட்சியர் சந்திரசேகர் சலாமூரி, கொரோனா வார்டு மற்றும் சஸ்பெக்ட் வார்டுகளில் பணிசெய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவு பணியாளர்கள் எங்கே தங்க வைத்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பியதுடன் அவர்களுக்கு தங்குமிடம், உணவு என தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, தனியார் ஹோட்டல்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஜூலை 9 முதல் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும், வாட்ஸ் அப் குழுவில் முதல்வருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று நேரத்தில் மணல் குவாரி எதற்கு என்று கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பல மணல் குவாரிகளுக்கு ஆட்சியர் நடவடிக்கையால் மூடுவிழாவும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

*-காசி*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *