�சிறப்புத் தொடர்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020: ஓர் முழுப் பார்வை – 6

public

பேராசிரியர் நா.மணி

எட்டாள் வேலை செஞ்சாலும் எதுத்தால் வேலை ஆகாது” என்று ஒரு சொலவடை இருக்கிறது. இதன் பொருள், ஒருவர் எட்டுப் பேர் செய்யும் வேலையைச் செய்யலாம். ஆனால், எதிர்த்து மட்டும் பேசக் கூடாது என்பதே. எதிர்த்து பேசுதல் என்பது எதிர்த்துக் கேள்வி கேட்டல். அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது தன்னை ஏதேனும் ஒரு வடிவில் ஆள்வோரை அஞ்சாமல் கேள்வி கேட்பது. இன்னொருபுறம், இந்த ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கும் ஆற்றல் அல்லது அறிவுதான் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு செல்வங்களையும் வளங்களையும் சேர்க்க மூலகாரணமான அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்த்து எடுத்துள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களை யோசிக்க வைத்திருக்கிறது. சரி செய்திருக்கிறது. தூக்கி எறிந்துள்ளது. மாற்றுக் கருத்துகளுக்கு இடம் அளிக்க செய்துள்ளது. அனைத்து கண்டுபிடிப்புகளின் அனைத்து மாற்றங்களின் ஆணி வேர். ஜனநாயகப் பயிர் வளர அடி உரமாக விளங்குவது இந்தக் கேள்வி. கேள்வி கேட்கும் மனப்பான்மை. கேள்விகள் முறைப்படி அனுமதிக்கப்படவில்லை எனில் எதிர்த்து நிற்றல், போராடுதல், மாற்றங்களை உருவாக்குதல், அதன் வழி மனிதகுலம் இன்னும் விரிவான பயணகளைப் பெறுதல் என்று விரிவடைந்து கொண்டே செல்கிறது.

எதிர்த்துக் குரல் கொடுக்க தொடங்கிய காலம் முதல், அந்தக் குரலில் ஒலிக்கும் நியாயம் உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் குரல்வளையை நெரிக்கும் போக்கும், நாக்கை துண்டாடுவதும் காலங்காலமாக நடந்தேறி வருகிறது. அதையும் எதிர்த்தே கேள்விக் குரல் வெற்றி பெறுகிறது. தனது கேள்விக்கு விடை கிடைக்கும் வரை இக்குரல் அடங்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஜனநாயகம் உலகெங்கும் தழைத்தோங்க எதிர்க்குரலின் பங்கு மகத்தானது. அடிப்படையானது. அறிவியல், தொழில்நுட்பம், ஜனநாயகம் ஆகியவற்றை கேள்வி கேட்கும் மனப்பான்மையே வளர்த்தெடுத்து வருகிறது. அதே காலகட்டத்தில் எதிர்க்குரலை அடக்க பல்வேறு முயற்சிகள் நடப்பதை கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது.

கொரானாவின் மீதான இந்தப் பொது ஊரடங்கு காலகட்டம்கூட அதற்கு நன்கு பயன்படுத்தப்பட்டு வருவதைப் பலரும் அறிவர். இதோடு இணைத்துதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைக்கூட அவ்வாறே அணுகத் தோன்றுகிறது. அமையவிருக்கும் தொழிற்சாலைகள் வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை ஏன், எப்படி, எதற்கு என்று கேள்வி கேட்கும் குரல்களை அடைக்கும் வண்ணம் 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம், தேனி பொட்டிபுரம் நியூட்ரினோ, ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நிறுவ முயற்சி செய்யப்படும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பாரத் மாலா, பாரியோஜனா திட்டம், கடற்கரை மண்டலங்களில் அமையவிருக்கும் சாகர்மாலா திட்டங்கள் என்று பத்துக்கும் மேற்பட்ட திட்டங்களில் தமிழ்நாட்டிலிருந்து கேள்விக் குரல்கள் வலுவாக ஒலித்தன. இயற்கை வளங்களை மையமிடும் இந்தத் திட்டங்களில் மக்களின் எதிர்ப்பு குரல் உண்மைக்கு மாறாக இருக்கிறது என்று அரசு கருதும்பட்சத்தில், மக்களின் அச்சம், சந்தேகம், பீதி, தவறாகப் புரிதல்கள் என எல்லாவற்றையும் போக்குவதற்கும் அரசே கடமைப்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க முடியாமல் குரல்வளையை நசுக்குவது அல்லது பேச முடியாத வண்ணம் பிளாஸ்திரி போட்டு ஒட்டுவது தீர்வல்ல. தீர்வுக்கான எதிர்த்திசையில் பயணிப்பது.

**மக்களின் கேள்விகளை நிராகரிக்க…**

2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு உத்திகளை பல விதமான வழிகளில் கையாண்டுள்ளது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம். ஏற்கனவே இருந்த கருத்துக் கேட்பு கால அவகாசத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பது, முப்பது நாட்களை இருபது நாட்களாக குறைப்பது என்று முடிவெடுத்துள்ளது. இந்த முப்பது நாட்கள் ஏற்கனவே 45 நாட்கள் என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெற்று தொடங்க வேண்டிய தொழில்களை அந்த பட்டியலில் இருந்து நீக்குதல். ஒரு திட்டத்தை தேச நலன் சார்ந்த அல்லது கேந்திர முக்கியத்துவம் (Strategic Importance) வாய்ந்த திட்டம் என்று அறிவித்தல். எந்த ஒரு தொழிற்சாலைக்கும் அது தேசநலன் சார்ந்தது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசு வாதங்களை அடுக்க இயலும். அப்படி ஏராளமான திட்டங்கள் உள்ளன. கருத்து கேட்பது முறையின் வடிவத்தை மாற்றுதல். கருத்து கேட்கும் இடங்களை மாற்றுதல். கருத்துக் கேட்பு நடத்த இயலாத நிலைகளிலும் நெளிவுசுளிவாகக் கருத்துக் கேட்பு நடத்த வழிவகை செய்தல். பூடகமான சொல்லாடல்களை பயன்படுத்துதல். மத்திய அரசின் வசதிக்கேற்ப அர்த்தம் புனைந்து உரைத்தல். அதன் தன்மையை மாற்றுதல்.

இப்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு உத்திகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. வளர்ச்சி திட்டங்களில் உள்ள குறைகளை மறைத்தல், மக்கள் பங்கேற்பை அங்கீகரிக்க மறுத்தல். மக்களின் குரலுக்கு செவி மடுக்க மறுத்தல் அல்லது கண்டுகொள்ளாமல் இருத்தல். இவையெல்லாம் பேசு பொருளே அல்ல என உதாசீனப்படுத்தல் என்ற நிலைக்கு செல்ல எங்கிருந்து வருகிறது?

மக்களை நம்ப மறுத்தல், ஜனநாயக மாண்புகளை மறுத்தல், கொள்ளை லாபம் ஈட்டுவோர் கூறும் கொள்கைகளை உண்மையென நம்புதல் அல்லது அதற்கு பங்காளியாக மாறுதல் ஆகியவையே இதற்கு அடிப்படை காரணங்களாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் சூழலியல் பாதுகாப்புக்கு என்ற நிலையை மாற்றி, கொள்ளை லாபத்தை எளிதாக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை எப்படி மாற்றி அமைப்பது என்ற நிலைக்குக்கொண்டு சென்று உள்ளது.

இந்திய நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் ஆரோக்கியம், நீடித்த நிலைத்த வளர்ச்சி ஆகியவற்றை உத்தரவாதம் செய்ய உருவாக்கப்பட்ட நடைமுறைகள் சட்டங்கள் பெரும் சுமையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தச் சுமையைக் குறைப்பதே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் பணியாக மாறி வருகிறது.

**மாதவ காட்கில் வழிமுறை**

மக்கள் கருத்து கேட்பது என்பதை மட்டுமே கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வள மேலாண்மை என்பது இவ்வளவு பெரிய சுமையாக எப்படி மாறியது? சர்வதேச சட்டங்கள், இந்தியச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள், இந்திய அரசியல் சாசனம் ஆகியவை கூறும் அறிவியல்பூர்வமான வழிமுறைகளை கைக்கொண்டால் தீர்வு கிட்டும். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ காட்கில் அவர்களே இந்த முறையை தான் பரிந்துரை செய்கிறார். 2011ஆம் ஆண்டு அவர் தயாரித்து அளித்த பிரசித்தி பெற்ற “மேற்கு மலைத் தொடர்ச்சி சூழலியல் பாதுகாப்பு அறிக்கையில்” அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிடல் என்பது மேலிருந்து தொடங்காமல் கீழிருந்து தொடங்க வேண்டும் என்கிறார் அவர். எல்லா வேலைகளையும் மேலிருந்து முடித்து விட்டு, திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும் உள்ளூரில் கருத்து கேட்கும்போது, திட்டத்திற்கு ஆதரவை மட்டுமே நல்க வேண்டும். திட்டத்தின் பாதக விளைவுகளைப் பற்றி கூறக் கூடாது என்று நினைக்கிறார்கள். கேள்வி கேட்டால் கேள்விகளுக்கு ஏற்கத்தக்க பதில் கிடைக்காதபோது போராடினால் தேச விரோத சக்திகள் போல் கருதப்படுகிறார்கள். திட்டத்துக்கான பூர்வாங்க வேலைகள் மேலிருந்து நடைபெற்று வரும்போதே திட்டம் நடைமுறைக்கு வரும் பகுதியில் சரியாகவோ, தவறாகவோ அவரவர் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கருத்து நிலைகளுக்கேற்ப கருத்து பரவல் நடக்கிறது. திட்டப் பணிகளை முழுமையாக முடித்துக்கொண்டு, இறுதியாக கருத்துக் கேட்பு நடக்கும்பட்சத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவினர் கூறும் சரியான விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். எனவே கீழிருந்து திட்டமிடல் மேலான உத்தி என்பதை ஆட்சியாளர்கள் எப்போது அறிந்து கொள்ளப் போகிறார்கள்?

இப்படி ஒரு நடைமுறை அமலுக்கு வரவும் மக்களின் எதிர்க்குரல்கள், கேள்விகள், போராட்டங்கள், கருத்து பிரச்சாரங்கள் பேன்றவையே தக்க பலன் தரும். அதற்கும் தமிழ்நாடே முன்னுதாரணமாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் நான்கு மண்டலங்களிலும் நடைமுறைப்படுத்த முனைந்த வளர்ச்சி திட்டங்களின் மீதான தங்கள் கேள்விகளுக்குப் பதில் கேட்டு, பாதிப்புகளுக்கு இழப்பீடு கேட்டு, அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனில் அதைத் தடுத்து நிறுத்தக் கோரி, நடைபெற்ற எழுச்சிமிக்க போராட்டங்கள் வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தின் உயிர் துடிப்பைக் காட்டுவது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் மீதும் தமிழ் நாட்டு மக்கள் காத்திரமான எதிர்வினை ஆற்றி வருகின்றனர். சுற்றுச்சூழல் அமைப்புகள் இளைஞர் அமைப்புக்கள் சுமார் 75 அமைப்புகள் 2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை மீது எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்தே இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. அறிக்கையை திரும்பப் பெறும்படி வலியுறுத்தி உள்ளது. இப்படி இந்தியா முழுவதும் கூட பரவலாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமைப்புக்கள் குரல் எழுப்பி வருகின்றன. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் 63 பேர் கையொப்பம் இட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனநாயகத்தின் இந்த அடிப்படை மாண்பு, EIA விஷயத்தில் தழைத்து வளர்வது ஆரோக்கியமானதே.

1990கள் முதல் தான் வளர்ச்சி பற்றியும் வீழ்ச்சி பற்றியும் ஒரு சேர வலுவாக பேசுகிறோம். இந்தக் காலகட்டத்தில்தான் நீடித்த வளர்ச்சி அல்லது குன்றாத வளர்ச்சி குறித்த கருத்தாடல்களும் முன்னுக்கு வந்தது. ஆட்சி மாறுகிறது. ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். ஆனால் சீரழிவுகள் தொடர்கிறது. இதற்கும் அதே 1990களே தொடக்கம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு உத்திகள் சிதைக்கப்படுவதுகூட அதையொட்டியே.

**தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்….**

**கட்டுரையாளர் குறிப்பு:**

பேராசிரியர் நா. மணி, மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் Environment climate change and disaster management என்ற நூலின் ஆசிரியர்.

**முந்தைய பகுதிகள்**

[பகுதி 1](https://minnambalam.com/public/2020/07/31/16/environmental-impact-assessment-special-article)

[பகுதி 2](https://minnambalam.com/public/2020/08/01/14/eia-2020-agriculutere-and-enviornment-specail-article)

[பகுதி 3](https://www.minnambalam.com/politics/2020/08/02/19/environmental-%20impact-%20assessment-special-article)

[பகுதி 4](https://www.minnambalam.com/public/2020/08/03/18/Environment-Impact-Assessment-eia-2020-special-article)

[பகுதி 5](https://www.minnambalam.com/public/2020/08/04/8/Environment-Impact-Assessment-eia-2020-special-article)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *