Iஅமைச்சர் ஊரில் கொரோனா பீதி!

public

தமிழக தொழில்துறை அமைச்சர், சொந்த ஊரான பண்ருட்டி பகுதி மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தில் உள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி, அண்ணா கிராமம் ஒன்றியம், மேல்குமாரமங்கலம் ஊராட்சி, தொழில்துறை அமைச்சராக இருக்கும் எம்.சி.சம்பத் பிறந்த ஊர்.

அமைச்சர் ஊரைச் சேர்ந்த சங்கராமன் என்பவர், பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சில நாட்களுக்கு முன், இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவமனை சார்பில் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை சொந்த ஊரான மேல் குமாரமங்கலம் கிராமத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொது மக்கள் பார்வைக்காக வைத்து, பின் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அப்போது, ஊர் மக்களும், உறவினர்களும், அவரிடம் படித்த மாணவர்களும் வந்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், அமரர் ஊர்தியுடன் வந்த வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் இறந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாகக் கூறிவிட்டு, உடலை எடுத்து சென்று பண்ருட்டி மின் மையானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

இந்த விஷயம், விடியற்காலையில் ஊர் மக்களுக்குத் தெரிந்ததும் அச்சமடைந்துள்ளனர். ‘கொரோனா பாதிக்கப்பட்டவரை ஊருக்குள் கொண்டுவந்து ஊருக்கே தொற்றை ஏற்படுத்திவிட்டார்களே’ என்று இறுதிச் சடங்குக்குள் சென்றவர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்விவகாரம் குறித்து, நாம் ஆரம்பச் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம், “இறந்துபோன சங்கராமன் நாராயணன்(77), எல்.என்.புரம் பண்ருட்டி விலாசம் கொடுத்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி, சளி,காய்ச்சல் காரணமாக கொரோனா டெஸ்ட் கொடுத்துள்ளார்.

4ஆம் தேதி, மாலை 7.30 மணிக்கு வந்த ரிப்போர்ட்டில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததும் அவரது விலாசம் தேடி அலைந்தோம். டெஸ்ட் எடுக்கும்போது பண்ருட்டி விலாசம் கொடுத்துவிட்டு, உடலை மேல்குமாரமங்கலத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.

சொந்த ஊர் மேல்குமாரமங்கலம், வசிப்பது பண்ருட்டி என்று இரவு 10.00 மணிக்குமேல் தான் தெரியவந்தது. நள்ளிரவில் அதிகாரிகளுடன் சென்று உடலைக் கைப்பற்றி அதிகாலை 2.00 மணிக்கு மின் மயானத்தில் அடக்கம் செய்தோம். பின்னர், அன்று காலையில் ஊர் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, அப்பகுதி மக்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து வருகிறோம்” என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று, தவறான விலாசம் கொடுப்பதாலும், மருத்துவத் துறையினரின் அலட்சியத்தாலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

**-வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *