கேரள நிலச்சரிவு – தொடரும் மீட்புப் பணி : தமிழக தொழிலாளர்களின் நிலை?

public

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, அடுத்தடுத்து பேரழிவு தரும் நிகழ்வுகளைச் சந்தித்து வருகிறது. கன மழையால் நிலச் சரிவு, விமான விபத்து எனக் கேரளாவில் ஒரே நாளில் இரு துயர சம்பவங்கள்  நிகழ்ந்துள்ளன. இது கேரள மக்களை மட்டுமின்றி தமிழக மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் 2018 வெள்ளம் போல், கேரளா மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதன் விளைவாக, மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள, பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று மூணாறு. இப்பகுதியில் அதிகளவு தேயிலை தோட்டங்கள் பயிரிடப்படுகிறது. நல்லதண்ணி எஸ்டேட், கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட், கொழுக்குமலை எஸ்டேட்  என பல்வேறு தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், கட்டிக்கொடுக்கப்படும் வீடுகளில், பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இங்குத் தங்கியிருப்பவர்களில், பெரும்பாலோனோர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இந்நிலையில், மூணாறு அருகே பெட்டிமுடி டிவிசன், ராஜமலை பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில், தொழிலாளர்கள் தங்கியிருந்த 4 வரிசை வீடுகள் இடிந்து  மண்ணுக்குள் புதைந்தன.

காலை நேரம் என்பதால் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், உறங்கிக் கொண்டிருந்தவர்களும் மண்ணுக்குள் புதைந்தனர். சுமார், 80க்கும் அதிகமானோர் நிலச்சரிவில் சிக்கினர்.

இதில் இன்று வரை 22 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 70 பேர், உள்ளூர் மக்கள், போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் என அனைத்து தரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காந்தி ராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (46), ராஜேஸ்வரி (63), பாரதி (36), மணிவண்ணன் (26) ஆகியோர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும், தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மீதமுள்ளவர்களின் நிலை கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், இருட்டு காரணமாக நேற்று இரவு மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் மீட்டுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

**கலங்கும் கயத்தாறு**

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதி மக்கள், நிலச்சரிவில் மாயமானவர்கள் தொடர்பாக அப்பகுதி தாசில்தார் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 71 தொழிலாளர்கள் கேரள நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதில், பெரும்பாலோனோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் உறவினர்களைக் காண கேரளா செல்வதற்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ராஜமலை தேயிலைத் தோட்டத்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளித்ததாகத் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “கேரள மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கி இருக்கின்ற குடியிருப்புகள் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த நிலச்சரிவு படம்பிடித்துக் காட்டி இருக்கின்றது.  எனவே இனியாவது தேயிலைத் தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்கள் குடியிருப்பைப் பாதுகாப்பான இடங்களில் அமைத்திட வேண்டும். பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சம்பவ இடத்தில், ஊழிக் காற்று வீசுவதால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாது என்றும், சாலைகள் அனைத்தும் அடைபட்டுக் கிடப்பதாலும் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் சம்பவ இடத்துக்குச் செல்வேன் என்று கூறியுள்ளார். அதுபோன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை, விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்  கேரள முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *