jகொரோனா தடுப்பூசி இலவசமாகக் கிடைக்குமா?

public

கொரோனா வைரஸ் தொற்று பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மனித பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் விரைவில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் என்றும் அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை வாங்க இந்தியா உட்பட பல நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சில தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் ரெம்டிசிவிர் (Remdesivir), டோசிலிசம்ப் ஆகிய மருந்துகள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனையானது வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அதன் விலை அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் பொது மக்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான சௌமியா சாமிநாதன், கொரோனா வைரஸ் தொற்றுக்காகக் கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க நிதி திரட்டும் பணி நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. இக்குழு மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வருகிறது.

இக்குழுவுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் பெரிதும் உதவி வருகிறார். இந்நிலையில் அவருக்கு கோவிட் 19 ஒழிப்பு பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.

இன்று கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சௌமியா சாமிநாதனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சௌமியா சாமிநாதன், “உலக அளவில் கொரோனாவுக்கு 200 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சியில் உள்ளது. இந்தியாவில் 8 நிறுவனங்கள் தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு அரசாங்கமும் உதவி செய்து வருகிறது. இது ஒரு நீண்டகால நடைமுறை. பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் இந்த தடுப்பூசி இலவசமாகத் தான் கிடைக்கும். அதற்கான நிதி திரட்டல் பணி உலக அளவில் நடந்து வருகிறது. குறைந்தபட்சம் ஒரு வருடமாவது இந்த புதுவிதமான வாழ்கையை நாம் அனுசரித்துத் தான் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *