�எரிவாயு குழாய்க்கு எதிர்ப்பு: பொட்டல்காடு கிராமத்தில் போலீஸ் குவிப்பு!

public

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் 142 கிமீ தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.

இதற்கு, தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், பொட்டல்காடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மக்கள் குடியிருப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், நெல், வாழை போன்று பயிரிடப்படும் விளை நிலங்கள் வழியாக இந்த எரிவாய் குழாய் பதிக்க அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வீட்டில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

விளைநிலங்கள் வழியாக அல்லாமல் மாற்றுப் பாதையில், எரிவாயு குழாய் அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இவ்வாறு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஈசாக் என்பவரது நிலத்தோடு குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, 142 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணி பல்வேறு விவசாய நிலங்களை கடந்து 134 கிமீ வரை பணி நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பொட்டல்காட்டில் ஊருக்குள் எண்ணெய் குழாய் பதிப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் ஊர் தலைவர் செல்வசேகர் தலைமையில் இன்று போராட்டம் நடத்தினர். நேற்று இரவே போராட்டம் தொடர்பான செய்தி வாட்ஸ் அப்பில் பரவியிருக்கிறது.

குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட இருப்பதாகவும், நான்கு பேர் தீக்குளிக்க தயாராக இருப்பதாகவும் தகவல் பரவியிருக்கிறது. இதைத்தொடர்ந்து இன்று காலை குலையன்கரிசல், பொட்டல்காடு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 300 போலீசார், அதிரடி படையினர் ஆகியோர் தீயணைப்பு வாகனத்துடன் போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

”கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று அரசு உத்தரவு போட்டுள்ளது. இந்த நோய்த் தொற்று எப்படி பரவுகிறது என்பதே தெரியாது. மருத்துவர்களே பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு அது புரிவதில்லை. எம்.பி.ஒருவரே கொரோனாவால் இறந்திருக்கிறார். இந்த சமயத்தில் போராட்டம் என்றும் 4 பேர் தீக்குளிக்க தயாராக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இது எல்லாம் சட்டப்படி தவறு.

இந்த குழாய் அமைப்பதற்கு எதிராக உங்கள் ஊர் தலைவரே நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதற்கும், இந்த பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் வரை குறிப்பிட்ட இடத்தை தாண்டி போடமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சூழலில் யாரோ சொல்வதை கேட்டு இப்படி நடந்து கொள்ளலாமா. மக்களுக்கு எதிராக போலீசார் செயல்பட கூடாது என்பதால் தான் இதுவரை எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை ” என்று போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊர் தலைவர் எதற்கு எல்லாரும் ஓரிடத்தில் கூட வேண்டும் என்று தகவல் பரப்புகிறார் என்றும் போலீசார் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பொதுமக்கள், போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டதால் தான் நாங்கள் இங்கு வந்தோம். மாற்றுப்பாதையில் குழாய் அமைக்க வேண்டும் என்று அங்கு கூடியிருந்த பெண்கள் தெரிவித்தனர்.

ஆங்காங்கு போராட்டம் நடந்த நிலையில், ஒரு சில இடத்தில் போலீசாருக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதமும் முற்றியது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை மாற்று பாதையில் குழாய் அமைக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுக்கிறோம். எங்கள் உயிருக்கு பயந்துதான் போராடுகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

மற்றொருவர் கூறுகையில், எங்கள் ஊரில் போராடக் கூட காவல்துறை விடவில்லை. எனவே அவரவர் வீட்டில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளுக்கு சாலை வழியாக லாரிகள் மூலம் எரிவாயு கொண்டு வரும் போது அதிக செலவாகிறது என்பதால், நிலத்தடியில் குழாய்கள் பதித்து எரிவாயு கொண்டு வரப்படவுள்ளது. முதல்வர் தூத்துக்குடி வருகிறார். அதற்குள் போராட்டத்தை முடித்து வைக்க நினைக்கின்றனர். திருச்செந்தூர் ஆதித்தனார் மணிமண்டப நிகழ்ச்சிக்கு முதல்வர் வரும் போது குலையன்கரிசல் பகுதி விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்த அறிவித்தனர். எனவேதான், இப்போது மாவட்ட நிர்வாகம் வேகமாக செயல்படுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி ஆட்சியர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இன்று, போராட்டம் நடந்த பொட்டல்காடு கோயில் மண்டபத்தில் ஷூ காலுடன் காவல்துறை அணியாக நின்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *