மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

நீட் தேர்வு: ஆதாரை மறந்து வந்த மாணவி - உதவிய காவலர்!

நீட் தேர்வு: ஆதாரை மறந்து வந்த மாணவி - உதவிய காவலர்!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட மாநிலம் முழுவதும் 238 மையங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

நான்காவது ஆண்டாக தமிழகத்தில் நீட் நடைபெற்றது. நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். காதணி, செயின் போன்ற அணிகலன்களும் அணியக் கூடாது என்பதால் மாணவிகள் அதனை கழற்றி பெற்றோர்களிடம் கொடுத்து சென்றனர். நெல்லையில் திருமணமான மாணவி ஒருவர் தாலி மற்றும் மெட்டி ஆகியவற்றை கழற்றிய பிறகே அனுமதிக்கப்பட்டார். ஹால் டிக்கெட், ஆதார் கார்டு, அடையாள அட்டை என அனைத்தும் சரிபார்க்கப்பட்டது. அதுபோன்று நீண்ட தூரம் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்லவும் மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இந்த சூழலில் ஆதார் கார்டை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு தேர்வுக்கு வந்த மாணவிக்கு போலீசார் ஒருவர் உதவிய நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.

சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த மாணவி மவுனிகாவுக்கு (17), திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, புதுவாயல் பகுதியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வுக்காக மவுனிகா தனது தாய் ஷீலாவுடன் தேர்வு மையத்துக்குச் சென்றார். காலை 11 மணியளவில் தேர்வு மையமான டிஜிஎஸ் கல்லூரியை இருவரும் அடைந்தனர்.

அப்போது தேர்வுக்கு தேவையான அனைத்தும் இருக்கிறதா என்று சரிபார்க்கும் போது மவுனிகா ஆதார் கார்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரியவந்தது. ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு தொடங்கும் நேரமான மதியம் 2 மணிக்குள் வீட்டுக்கு சென்று ஆதார் கார்டை எடுத்து வர முடியுமா என்ற குழப்பத்தில் இருவரும் நின்றுகொண்டிருந்தனர்.

என்ன செய்வது, ஆதார் கார்டை எப்படி எடுத்து வருவது என இருவரும் பதற்றத்தில் நின்று கொண்டிருந்ததை பார்த்துகொண்டிருந்த போலீசார் மவுனிகாவுக்கு உதவியுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ், ஆரம்பாக்கம் காவல்நிலைய காவலர் மகேஷ்வரனை, மவுனிகாவின் தாயார் ஷீலாவுடன் வீட்டுக்கு அனுப்பி ஆதார் கார்டை எடுத்து வர உதவியுள்ளார். காவலர் மகேஷ்வரனுடன் வீட்டுக்கு சென்ற மவுனிகாவின் தாயார், ஆதார் கார்டை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

2 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த நிலையில். 1.20 மணியளவில் வந்து காவலர் மகேஷ்வரன் மவுனிகாவிடம் ஆதார் கார்டை ஒப்படைத்துள்ளார். இதையடுத்து நீட் தேர்வை எழுத சென்றுள்ளார் மாணவி மவுனிகா.

இதுகுறித்து ஆரம்பாக்கம் துணை ஆய்வாளர் ஏ.ஜி.சந்திரசேகரன் கூறுகையில், “தாயும் மகளும் குழப்பத்தில் நிற்பதை நாங்கள் கண்டோம். கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ், , என்ன நடந்தது என்று அவர்களிடம் விசாரித்தார். இருவரும் ஆதார் கார்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய மொபைல் எண் மூலம் மின்னணு ஆதார் அட்டையை எடுக்க முயன்றோம். ஆனால் அவர்கள் ஆதார் அட்டையில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தாததால், ஓடிபி பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மின்னணு முறையில் ஆதார் கார்டை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து டி.எஸ்.பி ரமேஷ், காவலர் மகேஷ்வரனிடம் ஷீலாவை அழைத்துச் சென்று உடனடியாக மாணவியின் ஆதார் கார்டை வாங்கி வருமாரு அனுப்பினார். மதியம் 1.20 மணியளவில் ஆதார் கார்டுடன் வந்த காவலர் அதனை மவுனிகாவிடம் கொடுத்து தேர்வறைக்கு அனுப்பினார்” என்று தெரிவித்துள்ளார்.

காவலர் மகேஷ்வரன் தி இந்து-விடம் கூறுகையில், மாணவின் வீட்டுக்கு சென்றதும்தான் அவரது குடும்ப பின்னணி தெரிந்தது. மிகவும் ஏழ்மையான குடும்பம். நீட் தேர்வுக்காக மவுனிகா கடுமையாக படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அப்போது, எப்படியாவது சரியான நேரத்திற்கு சென்று ஆதார் கார்டை மவுனிகாவிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் ஓடியது. அதன்படி ஆதார் கார்டை கொண்டு வந்து கொடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு தேர்வு முடிந்ததும் மாணவி மவுனிகா பத்திரமாக வீடு திரும்பவும் ஏற்பாடு செய்துள்ளார் காவலர் மகேஷ்வரன். தனது நண்பரின் காரில் மவுனிகாவை அனுப்பி வைத்த காவலர் மகேஷ்வரன் அந்த காரை பின் தொடர்ந்து மவுனிகா வீடு வரை சென்று, அவரின் பயண பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளார். காவலர் மகேஷ்வரனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 14 செப் 2020