மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

நீட்-மாநிலப் பாடத்திட்டமா, சிபிஎஸ்இயா? டி.ஆர்.பாலு

நீட்-மாநிலப் பாடத்திட்டமா, சிபிஎஸ்இயா?  டி.ஆர்.பாலு

மாணவர்கள் தற்கொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று (செப்டம்பர் 14) கூடியது.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி டி.ஆர்.பாலு தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியிருந்த அவர்கள், மாணவர்களின் உயிர் பறிக்கும் நீட்டை ரத்துசெய்ய வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் அவல நிலை பற்றி அவை மற்றும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழகத்திலிருந்து கிராமப்புற பின்னணி கொண்ட 12 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

அவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், நீட் தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த ஒரு மாதத்திற்குள் நீட் தேர்வை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பது சாத்தியமில்லாதது. அவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறித்து எதுவும் தெரியாது என்ற நிலையில், எந்த உதவியும் கிடைக்காததால் கையறு சூழலில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர் என்று குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, “எதிர்காலத்தில் மருத்துவர்களாக வர வேண்டியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்படும் என்றும், அதில் திருப்தி அளிக்காவிட்டால் கூடுதல் கேள்விகளை எழுத்துப்பூர்வமாக கேட்கலாம்” என்று கூறினார்.

இதுபோலவே திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, “பொதுப் பாடத்திட்டம் இல்லாத இந்தியாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடத்துவது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை கல்வியிலிருந்து புறக்கணிக்கும் செயல்” என்று குற்றம்சாட்டினார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்த தேர்விலாவது தேர்ச்சி பெற்று மருத்துவ சீட் கிடைக்குமா என்று மனப் பதற்றத்திலேயே இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நேற்று முன் தினம் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்டனர்.

மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 பேர் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சலில் தமிழகம் 12 மாணவர்களை பலி கொண்டிருக்கிறது.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 14 செப் 2020