ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளையும் சீரழிக்கிறது: நீதிமன்றம்!

public

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக இளைஞர்கள் பலர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டங்களில் மூழ்கியிருப்பது பெரும் அசம்பாவிதங்களுக்கு வழிவகுத்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தாக்கல் செய்த மனுவில், நேரடி சூதாட்ட விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள் அதிகரித்து வருகிறது.

இது சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக விளையாடும் இளைஞர்கள், பிறகு அதிலேயே மூழ்கி அடிமையாகிவிடுகின்றனர். விராட் கோலி, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்து இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு வட்டிக்குப் பணம் வாங்கி அதனை இழந்த இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. தற்போது ஆன்லைன் சூதாட்டங்கள் அதைவிட ஆபத்தானது என்பதால் இதையும் உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதோடு, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, விராட் கோலி மற்றும் தமன்னாவை எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளின் மன நலத்தையும் சீரழிக்கிறது என்று வேதனை தெரிவித்தனர். இம்மனு தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைச் செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *