நீட்டுக்கு எதிரான உண்ணாவிரதம்-கைது: பெண்களுக்கு நடந்த கொடுமை!

public

தமிழகத்தில் நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக, இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாகக் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி ஒரே நாளில், மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி ஆதித்யா, நாமக்கல் மோதிலால் என மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் வழிநடத்துதலின் பேரில் செயல்படுவதாகச் சொல்லப்படும் மக்கள் பாதை இயக்கத்தினர் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவ மாணவர்களின் கனவை நெறித்து, அறநெறியற்ற தேர்வு முறையால் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு அச்சுறுத்தும் நீட் தேர்வை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் செப்டம்பர் 14ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். அதோடு ஆன்லைனில் நீட் தேர்வுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கினர்.

சென்னையில் உள்ள மக்கள் பாதை இயக்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ஆரா அருணா,  சந்திரமோகன், அரவிந்த்,  கீதா, காசி நாகதுரை, தமிழ்செல்வி ஆகிய 6 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களது போராட்டத்திற்கு எதிர்க்கட்சியினர், மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

ஏழு நாட்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி காலை,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதோடு,  6 பேரைக் கைது செய்த போது போலீசாரை தடுத்த மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த 50 பேரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தின் போது போலீசார் தகாத முறையில் நடந்துகொண்டதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரமோகன் குற்றம் சாட்டினார். உண்ணாவிரதம் இருந்த ஆறு பேரையும் போலீசார் அடித்தனர். தலையில் தாக்கினர். பெண்களது டி-ஷர்டை பிடித்து இழுத்தனர். அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினர். போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக அரசு வரவில்லை. மக்களுக்காகத்தான் இந்த போராட்டத்தை நடத்தினோம். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டதால் போராட்டத்தைக் கைவிட்டோம் என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும், போலீசார் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக்  குற்றம் சாட்டுகின்றனர். ஆரா அருணா  கூறுகையில், எங்களைப் பெண்கள் என்று கூட பார்க்கவில்லை. தீவிரவாதிகள் போல் கைது செய்தனர். எங்களுக்கு நடந்த கொடுமை தமிழ்நாட்டில் வேறு எந்த பெண்களுக்கும் நடக்கக் கூடாது.  யாரையும் குறை சொல்ல வேண்டும் என்பது எனது நோக்கம் கிடையாது என்ற அவர், ஆறு நாட்களாகச் சாப்பிடாமல் மயக்கத்தில் கிடக்கும் எங்களைச் செப்டம்பர் 20 அதிகாலை 5.30 மணிக்கு வந்து கேட் ஏறிக் குதித்து, கைது செய்தனர். எங்களது உடம்பில் அப்போது எவ்வளவு தெம்பு இருக்கும் என்று நினைக்கிறீர்கள். தரதரவென்று இழுத்து, ஆடைகளை எல்லாம் உருவி கொடுமைப்படுத்தினர் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

சுயம் சார்ந்த எதையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. எனக்கு 33 வயது ஆகிறது. திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த சமூகத்துக்காகக் குறிப்பாகப் பெண்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால்  போலீசார் நடந்து கொண்ட விதம், இதுவரை பெண்களுக்காகக் குரல் கொடுத்ததை எண்ணி அசிங்கப்பட்டேன்.  ஏனென்றால் எங்களைக் கைது செய்தது ஒரு பெண் போலீஸ் தான். பிடிக்கக்கூடாத இடத்தில் எல்லாம் பிடித்தார்கள். ஆடையைக் கழட்டினார்கள் என்று கண்ணீருடன் பேசிய அவர், நாங்கள் என்ன தீவிரவாதிகளா என்றும் கேள்வி எழுப்பினார்.

இன்னொரு முறை காவல்துறையினர் இதுபோன்று கைது செய்யச் சென்றால் அவர்களும் உங்களது சகோதர சகோதரிகள் தான் என்று மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆவேசமாகக் கூறிய  ஆரா அருணா,  இதற்கெல்லாம் பயந்து சமூகத்துக்காகத் தொடங்கிய பாதையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.  என்னுடைய தமிழ் மக்களுக்கு எதிர்மறையாக எங்கு என்ன நடந்தாலும் போராட்டக் களத்தில் நான் நிற்பேன். என்ன செய்வீர்கள் நிர்வாணப்படுத்துவீர்களா… செய்து கொள்ளுங்கள். வேலுநாச்சியாரும் கண்ணகியும் வெறும் வரலாறு என்று நினைக்கிறீர்களா இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

இதுபோன்று பெண்களை மானபங்கப்படுத்தி தற்கொலை செய்ய வைத்து விடாதீர்கள், நான் தாங்கிக் கொள்வேன். வேறு யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது என்றார்.

அதோடு பால் பாக்கெட் கெட்டுப் போயிருந்தால் அதை மாற்றிக் கொடுப்பீர்கள். ஆனால் ஆறு உயிர் தெருவில் கிடந்தால் நாயைப் போல் அடித்து இழுத்துச் செல்வீர்களா என்ற மாநில ஆட்சியாளர்களுக்குக் கேள்வி எழுப்பிய அவர், இப்படியெல்லாம் செய்தால் போராட்டத்தைக் கைவிட்டுவிடுவோமா எனவும் சவால் விடுத்தார்.

இது முடிவல்ல தொடக்கம் என  உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதன்படி நீட் தேர்வுக்கு எதிராகக் கோயம்புத்தூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை என மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்று கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் போராட்டம் நடத்தினர்.

**-கவிபிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *