தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கைக் கையிலெடுத்த சிபிசிஐடி!

public

தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் இன்று (செப்டம்பர் 23) கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞர், சொத்து தகராறில் செப்டம்பர் 17ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த, அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணித் தலைவரான திருமணவேல் உட்படச் சிலர் மீது செல்வனின் தாயார் எலிசபெத்  புகார் தெரிவித்திருந்தார். இவர்களுக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திசையன்விளை காவல் துறையினர் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். செல்வன் கொலை வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தூத்துக்குடியில், தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். மேலும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டது. இந்த சூழலில் இன்று செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் கையில் எடுத்துள்ளனர். இந்த வழக்கை இதுவரை விசாரித்து வந்த விசாரணை அதிகாரியான,  துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வழக்கின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களையும், சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் அனில்குமாரிடம்  திருநெல்வேலியில் இன்று ஒப்படைத்தார்.

எனவே உடனடியாக விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீசார், குழுவுக்கு 5 பேர் வீதம் 6 குழுக்களாகப் பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாகக் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

எனவே சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்குபோல் இந்த வழக்கிலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி உட்பட அனைவரும் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *