oமரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பி?

public

மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்ற கேள்வியை எழுப்பும் விதத்தில் தனது சிலையை வடிவமைக்க முன்கூட்டியே சொல்லியுள்ளார் எஸ்.பி.பி.

அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பாடி தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி ரசிகர்களையும் தன் வசீகர குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 25ஆம் தேதி மரணம் அடைந்தது, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது மரணத்தை முன்கூட்டியே கணித்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்த தனது பெற்றோர் எஸ்.பி.சாம்பமூர்த்திக்கும், சகுந்தலாம்மாவுக்கும் சிலை வைக்க விரும்பினார். இதற்காக அவர் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி கொத்தபேட்டையைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ்குமார் உடையாரிடம் பெற்றோரின் சிலைகளை வடிவமைத்து தருமாறு ஆர்டர் செய்துள்ளார்.

இந்த சிலைகளை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், காஞ்சி காமகோடி பீடத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ள நெல்லூர் திப்பராஜூவாரி தெருவில் உள்ள தனது பரம்பரை இல்லத்தில் வைக்க விரும்பியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்தச் சிலைகளை நிறுவிவிடவும் அவர் திட்டமிட்டு இருந்திருக்கிறார்.

அதன் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவர் சிற்பி ராஜ்குமார் உடையாரை கடந்த ஜூன் மாதம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னையும் சிலையாக வடித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் தன்னால் நேரில் வர இயலாதபடியினால், தனது புகைப்படங்களை அனுப்புவதாக கூறி இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.

அதன் அடிப்படையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையை சிற்பி ராஜ்குமார் உடையார் நேர்த்தியாக வடிவமைத்து முடித்து விட்டார். இதை சிற்பி ராஜ்குமார் உடையார் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டபடி அவரது சிலையையும் வடித்து முடித்து விட்டேன். கொரோனா காலம் முடிந்ததும் ஒப்படைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரது மறைவுச்செய்தியைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டேன்” என்று கூறியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தனது வாழ்க்கை குறித்து பல உள்ளுணர்வுகளை கொண்டிருந்ததும், அவரது வாழ்க்கை வெற்றிகரமான ஒன்றாக விளங்க ஒரு காரணம் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். எனவே அவர் தனது மரணத்தையும் முன்கூட்டியே கணித்து தான் சிலைக்கு ஆர்டர் செய்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்த தகவல்களும், படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் எஸ்.பி.பி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று எஸ்.பி.பி.சரண் குறிப்பிட்டுள்ளார்.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *