�டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மீண்டும் கைது நடவடிக்கையைத் தொடங்கிய சிபிசிஐடி!

public

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் கொரோனா  பரவல் காரணமாக விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் கைது நடவடிக்கையைத்  தொடங்கியிருக்கிறது சிபிசிஐடி.

தமிழக அரசுப் பணிக்காக  டிஎன்பிஎஸ்சி  நடத்தும் குரூப் 1, குரூப் 2 ,குரூப் 2 ஏ , குரூப் 4  ஆகிய தேர்வுகளில் 2016ஆம் ஆண்டிலிருந்தே  முறைகேடு நடந்தது கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்து அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பலர் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.  முறைகேடுகளில் தொடர்புடைய இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி அலுவலக உதவியாளர் ஓம் காந்தன், செம்பியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த வடிவு உள்ளிட்ட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிரடி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில்  கொரோனா பரவல் காரணமாக வழக்கு விசாரணையில் மார்ச் முதல்  தொய்வு ஏற்பட்டது.

இந்த சூழலில், குரூப் 2 தேர்வை முறைகேடாக எழுதி  வருவாய் ஆய்வாளர், தாசில்தார், பதிவாளர்கள், நகராட்சி துணை ஆணையர் என முக்கிய பொறுப்புகளில் பதிவி வகிக்கும் 40 பேர் மற்றும் 10 விஏஓக்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாகவும், இவர்களைக் கைது செய்ய வேண்டாம் என்று  உத்தரவு வந்துள்ளதாகவும் சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மின்னம்பலத்தில் [டிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்?](https://www.minnambalam.com/public/2020/09/19/41/tnpsc-scam-cbcid-investigation) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இவ்வாறு வழக்கு கிடப்பில் இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், கடந்த 15 நாட்களாக மீண்டும் சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 15 நாட்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்  வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20 பேரைத் தேடும் பணி நடந்து வருவதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *