மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

நீட்: சொன்னதை செய்துகாட்டிய அரசுப் பள்ளி மாணவன்!

நீட்: சொன்னதை செய்துகாட்டிய அரசுப் பள்ளி மாணவன்!

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு உதாரணம்.... நீட் தேர்வில் சாதித்துக் காண்பித்த அரசுப் பள்ளி மாணவர், தேனி ஜீவித்குமாரை இன்று இந்தியாவே கொண்டாடி வருகிறது.

‘அரசுப் பள்ளி மாணவர்களாலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும், ஆனால் அதற்கான சிலபஸ் இல்லாததே தோல்விக்கான காரணம் என்று கூறுகிறார் ஜீவித்குமார்’...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த நாராயண மூர்த்தி - மகேஸ்வரி தம்பதியினரின் மகன் ஜீவித்குமார். நாராயண மூர்த்திக்கு வசதிகள் எதுவும் கிடையாது. ஆடு மேய்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். அம்மா மகேஸ்வரி 100 நாள் வேலைத் திட்டத்துக்குச் செல்லும் ஒரு கூலித் தொழிலாளி.

சில்வார்பட்டி, அரசு மாடல் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ஜீவித்குமார் பத்தாம் வகுப்பில், 498/500 மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பில் 548/600 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே படிப்பில் சுட்டியான ஜீவித்குமார், நடந்து முடிந்த நீட் தேர்வில் 664/700 மதிப்பெண்கள் பெற்று, நீட் தேர்வு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அகில இந்திய அளவில், அரசு பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துச் சாதித்த ஜீவித்குமாருக்கு பாராட்டு மழையும், வாழ்த்து மழையும் பொழிகின்றன. அரசுப்பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கியதால் அவர் தனது ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில் ‘நீட்’ தேர்வுக்குப் பயிற்சி பெற்று, இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி கண்டிருக்கிறார்.

இதுகுறித்து ஜீவித்குமாரின் வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர் சபரிமாலாவிடம் விசாரித்தோம். நீட் தேர்வுக்கு எதிராகத் தனது இடைநிலை ஆசிரியைப் பணியை ராஜினாமா செய்தவர் சபரிமாலா.

அவரிடம் பேசியபோது, “அனிதாவின் மரணத்துக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக போராடினேன்... இதற்காகக் கடந்த 3 ஆண்டுகளாக 7 லட்சம் மாணவர்களைச் சந்தித்தேன்.. தற்கொலை என்பது எதற்குமே தீர்வு கிடையாது.. நீட் தேர்வை நான் எதிர்க்கிறேன் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமே இல்லை.. ஆனால் நம் பிள்ளைகளால் எதுவுமே முடியாது என்பது இல்லை... எனவே மாணவர்களுக்காகவும், பெண் குழந்தைகளுக்காகவும் பல பகுதிகளுக்குச் சென்று பரப்புரைகள் மேற்கொண்டேன்.

அப்போதுதான் தேனி, சில்வார்பட்டியைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியரான அருள்முருகன் என்பவரது தொடர்பு கிடைத்தது. இதையடுத்துதான் ஜீவித்குமார் மற்றும் அவர் படித்த பள்ளிக்கும் எனக்கும் ஒரு இணைப்பு ஏற்பட்டது.

சிலபஸ் கொடுங்கள் ஜெயித்து காட்டுகிறேன்

ஒருமுறை, பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களை, நீயா நானா நிகழ்ச்சிக்கு அழைத்த போது ஜீவித்குமாரும், பகுதி நேர ஆசிரியரான அருள்முருகனும் சென்னைக்குச் சென்று கலந்து கொண்டனர். இதில், நீட் தேர்வு பற்றிய பேச்சு வரும் போது, ‘சிலபஸ் கொடுத்தால் நான் ஜெயித்து காண்பித்துவிடுவேன்’ என்று ஜீவித் சொல்கிறார். ஆனால் அதனை பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை. மைக்கை அடுத்தவரிடம் கொடுங்கள் என அந்த நொடி கடந்து சென்றுவிட்டது.

ஆனால் இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர் அருள்முருகன், சென்னையிலிருந்து மீண்டும் தேனிக்குத் திரும்பும்போது, ஜீவித்திடம், ‘ நீட் தேர்வில் பாஸ் ஆகிவிடுவேன் என்று விளையாட்டா பேசுற.. அதெல்லாம் பெரிய விஷயம்’ என கூறியிருக்கிறார். அப்போதும் சிலபஸ் கொடுத்தால் என்னால் முடியும் என்று ஜீவித்குமார் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து தேனியில் உள்ள அரசு நீட் பயிற்சி முகாமுக்குச் சென்று அங்கு நீட் தேர்வுக்காக படிக்க ஆரம்பித்தார். ஆனால் அங்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை, மாணவர்கள் தங்குவதற்கு ஏற்ற கழிப்பறை உள்ளிட்ட எந்தவொரு சுற்றுச்சூழலும் இல்லை.

எனவே அங்கிருந்து வெளியே வந்த ஜீவித் குறித்து ஆசிரியர் அருள்முருகன், என்னிடம் தெரிவித்தார். அப்போதுதான் சில்வார்பட்டி சென்று ஜீவித் குடும்பத்தினரிடம் பேசினோம்.

இதையடுத்து சில்வார்பட்டி அரசு பள்ளி முன்பே சென்று, ஜீவித்தை எப்படியாவது வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தோம்.

சில்வார்பட்டி அரசுப் பள்ளி முன்பே நிற்க வைத்து, ஜீவித்திடம் உன்னால் நீட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கமுடியும் என்று கேட்டதற்கு, 650க்கும் மேல் நிச்சயம் எடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறினார். அதோடு, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவத் துறைக்குள் போன பிறகு, என் பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களையும் நான் படிக்க வைப்பேன் என்று உத்வேகத்துடன் தெரிவித்தார்.

எனவே ஜீவித்தை படிக்க வைப்பதற்காக நிதி திரட்டினோம், அமெரிக்காவில் உள்ள தோழர் காட்வின் 75,000 ரூபாய் கொடுத்து உதவினார். இதையடுத்து பலரிடம் நிதி திரட்டி, நாமக்கல் எஸ்.ஆர்.வி பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்கவைத்தோம்.

ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் படிப்பார் ஜீவித்குமார். இந்நிலையில், லாக்டவுன் காரணமாக ஜீவித் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் வீட்டில் படிக்க உரிய வசதி இல்லாததால், ஜீவித்தை அழைத்துச் சென்று ஆசிரியர் அருள் முருகன், தனது செலவில் தங்கும் அறை, உணவு, மருத்துவம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துப் படிக்க வைத்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் மோகனும் உதவினார். இந்நிலையில் தான் ஜீவித் சொன்னதை போல 650க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “நீட் தேர்வு எழுதிய பிறகும் மாணவர் ஜீவித் ஆடு மேய்த்து கொண்டுதான் இருந்தார். இன்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு வெற்றிக்கு ஜீவித் சொல்லும் காரணங்கள் இதுதான்... அரசு பள்ளி மாணவர்களும் வெற்றி பெறும் வகையில், என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும். பயாலஜி பாடத்தைப் புரியும் வகையில் தமிழாக்கம் செய்து கொடுக்க வேண்டும். 1980 முதல் எல்லா துறை நுழைவுத் தேர்வின் வினா வங்கியையும் தொகுத்து வெளியிட வேண்டும். மேல்நிலை வகுப்பிலேயே நீட் பயிற்சி கொடுக்க வேண்டும். இதைச் செய்தாலே வெற்றி பெற்றுவிட முடியும், என்று வெற்றிக்குப் பிறகு ஜீவித் கூறினார்” என்று ஆசிரியர் சபரிலாமா குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்று ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து ஜீவித்தை படிக்க வைத்துவிட்டோம். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் இதை செய்ய முடியுமா? எனவே சரியான சிலபஸை கொடுத்து, மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஜீவித் குமார் வெற்றிக்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இன்று அரசுப் பள்ளி மாணவர் வெற்றிபெற்றுவிட்டார் என கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே அரசு பள்ளி மாணவர்களால் முடியாது என்று எதுவும் இல்லை. நீட் தேர்வைச் சந்திக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தகுதி வாய்ந்த ஆசியர்களால் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். சரியான சிலபஸ் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு என்பது தேவையற்றதுதான், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக ஒருபக்கம் போராடினாலும், மறுபக்கம் அதனால் பாதிக்கப்படக் கூடிய மாணவர்களுக்காக அனிதா பெயரில், அடுத்த ஓராண்டுக்குள் நீட் பயிற்சி மையத்தைத் தொடங்கவுள்ளோம். அதன்மூலம், தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு முதற்கட்டமாக 100 பிள்ளைகளுக்குப் பயிற்சி வழங்கவுள்ளோம். இவர்களுக்கு ஜீவித்குமாரும் பயிற்சி கொடுப்பார்” என்று குறிப்பிட்டார் ஆசிரியர் சபரிமாலா.

-பிரியா

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon