மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

‘வெற்றிக்குக் காரணம்’: தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்!

‘வெற்றிக்குக் காரணம்’:  தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்!

தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முதல் 25 இடங்களில் கூட வரவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் 10 இடங்களுக்குள் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் வந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலைச் சேர்ந்தவர் ராஜவேல். நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி கனிமொழி.. இவர்களுக்கு ஸ்ரீஜன் மற்றும் அகிலேஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நடந்து முடிந்த நீட் தேர்வில், மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 8ஆவது இடமும் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுதிய இவர், 385 எடுத்திருந்தார். இதனால் கல்லூரியில் சேர முடியாத காரணத்தால் இரண்டாவது முறையாகத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

வெற்றி தொடர்பாக ஸ்ரீஜன், “இந்த வெற்றியை மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன். முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை. இரண்டாவது முறையாக நாமக்கல் க்ரீன் பார்க் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். கொரோனா பேரிடர் காலத்தில் மன அழுத்தத்தில் தான் இருந்தேன். பின்னர் பயிற்சி மையம் படிப்பதற்கு ஏற்ற சுற்றுச்சூழலை அமைத்துக் கொடுத்தது.

உயிரியல் பாடத்தை பொறுத்தவரை என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். எந்த பாடத்தையும் வெறுப்பாகவோ, சுமையாகவோ நினைக்காமல், ஆர்வத்தோடு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலான பயிற்சிக்கும், மனம்தளராத முயற்சிக்கும் பலன் கிடைத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவும், வரும் காலத்தில் கார்டியாலஜிஸ்டாக வேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதே பயிற்சி மையத்தில் படித்த மாணவி, நாமக்கல்லைச் சேர்ந்த மோகனபிரபா 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 52ஆவது இடத்தையும், தமிழக அளவில் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர்,

“எய்ம்ஸ் மருத்துக் கல்லூரியில் படித்து, எதிர்காலத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும்” என்ற லட்சியத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

சென்னை மேல் அயனாம் பாக்கம், வேலம்மால் வித்யாலயா பள்ளியில் பயின்ற ஜி.ஸ்வேதா, 701 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 62ஆவது இடத்தை பிடித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காகத் தினமும் 8-10 மணி நேரம் படித்ததாகத் தெரிவித்துள்ள அவர், 12ஆம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன். பள்ளியில் பயின்றதைத் தவிரத் தேர்வுக்காக நான் வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தைப் பயன்படுத்தி உயிரியல் , விலங்கியல் பாடங்களைப் படித்தேன். இயற்பியல் வேதியியலில் பாடங்களில் வரும் கணக்குகளைப் போட்டுப்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார்.

தேனியைச் சேர்ந்த ஜீவித்குமார், அகில இந்திய அரசுப் பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon