மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

இந்திய அரசின் புதிய முதலீட்டுக் கொள்கையால் மூடப்பட்ட அமெரிக்க ஊடகம்!

இந்திய அரசின் புதிய முதலீட்டுக் கொள்கையால் மூடப்பட்ட அமெரிக்க ஊடகம்!

மின்னம்பலம்

அ.குமரேசன்

கொரோனா கால நெருக்கடியின் பின்னணியில் பல பெரிய ஊடக நிறுவனங்கள் ஆட்குறைப்பு, ஊதியவெட்டு போன்ற ‘முகக் கவச’ நடவடிக்கைகளை எடுத்த செய்திகள் வந்தன. அச்சு ஊடக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட விற்பனைச் சரிவு உள்ளிட்ட நெருக்கடிகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட இயலாதுதான். லாபகரமாக இயங்கி வந்த, நிறைய வாசகர்களைப் பெற்றிருந்த ஓர் இணையத்தள ஊடக நிறுவனம், அதுவும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் மூடப்பட்டுவிடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஹஃப்போஸ்ட்’ என்று சுருக்கமாகக் கூறப்படும் ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ இணைய ஏட்டின் இந்தியப் பதிப்பான ‘ஹஃப்போஸ்ட் இந்தியா’ தளம் நவம்பர் 24 அன்று மூடப்பட்டுவிட்டது.

இந்தியப் பதிப்பின் தலைமை ஆசிரியராக இருந்த அமான் ஸேத்தி உணர்ச்சிப்பூர்வமாக ஒரு ட்விட்டர் பதிவு மூலமாக தளம் மூடப்பட்டது பற்றித் தெரிவித்திருக்கிறார். பல வாசகர்களும், இதில் எழுதி வந்தவர்களும் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தளத்தில் இனி புதிய கட்டுரைகள் செய்திகள் வெளியிடப்பட மாட்டாது என்றாலும் ஏற்கெனவே வந்த எழுத்துகள் அழிக்கப்பட்டு விடவில்லை, இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளன, அவற்றை விரைவில் எடுத்துப் படிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பதிப்பின் ஆசிரியர் குழுவிலும் தொழில்நுட்பப் பிரிவிலும் பணியாற்றி வந்த 12 பேர் சட்டென வேலையிழந்துவிட்டார்கள். அவர்களுக்கு ஊதியத்தோடு கணிசமான அளவிற்கு தொகை தரப்பட்டுள்ளது என்றும், வேறு வாய்ப்புகளுக்கு உதவுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்திய அரசின் புதிய கொள்கை

மூடல் முடிவின் பின்னணியில் இணையத்தள ஊடகங்கள் தொடர்பாக இந்திய அரசு வகுத்துள்ள புதிய கொள்கை, எப்படிப்பட்ட செய்திகள் வந்தன என்பதன் மீதான எதிர்வினை, நிறுவன நிர்வாகத்தின் வணிக அணுகுமுறை ஆகிய காரணங்கள் இருப்பதாகவும் ஊடகவியலாளர்களிடையே பேச்சு அடிபடுகிறது.

இந்தியாவில் இயக்கப்படும் இணையத்தள ஊடகங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் 26 சதவிகிதம் வரையில் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுப் பங்குகளை 26 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. இதுவரையில் இப்படிப்பட்ட முதலீட்டு வரம்பு இருந்ததில்லை.

பொதுவாக ஊடகத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகவும் முழுமையாகவும் ஆதிக்கம் செலுத்துவதற்கு பல்வேறு கோணங்களில் இங்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. அதைத் தடுக்க வேண்டும், இல்லையேல் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டும் வந்துள்ளது. இந்திய ஊடக நிறுவனங்களிடமிருந்து மட்டுமல்லாமல் வேறு பல அமைப்புகளிடமிருந்தும் இந்தக் கருத்துகள் வந்திருக்கின்றன. இந்திய நிறுவனங்களின் வணிக நலன் மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் தங்களது அரசியல் நலன்களுக்கு ஏற்பவே இங்கும் செயல்படும் என்ற கோணத்திலும் இந்த எதிர்ப்புகள் வெளிப்பட்டன.

இருந்தாலும், அரசு எடுத்துள்ள முடிவு இந்தப் பார்வையில்தானா என்ற கேள்வி எழுகிறது. பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்ய அனுமதித்துள்ள அரசு ஏன் இதிலே மட்டும் இந்த சதவிகித வரம்பை விதிக்க வேண்டும்?

அச்சு ஊடகங்களும், இணைய ஊடகங்களும்

இந்தியாவின் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் பெருமளவுக்கு அரசு சார்பான நிலையெடுத்துச் செயல்படுகின்றன, அல்லது பெரிய அளவுக்கு முரண்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. ஆனால் இணையத்தள ஊடகங்களிடையே ஆட்சியாளர்கள் அத்தகைய செல்வாக்கு செலுத்த முடியவில்லை என்று ஒரு காரணம் கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலும்தான் வெளிநாட்டு இணையத்தள ஊடக நிறுவனங்களுக்கான இப்படிப்பட்ட ஒரு முதலீட்டுக் கட்டுப்பாட்டை அரசு கொண்டு வந்திருக்கிறது என்கிறார்கள்.

அரசின் இந்தக் கொள்கையால் பின்வாங்குகிற முதல் வெளிநாட்டு இணைய ஊடகம் இதுதான். புலனாய்வுச் செய்திகளை வெளியிட்டு வந்துள்ள ‘ஹஃப்போஸ்ட் இந்தியா’, முன்பு அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பாக வெளியிட்ட கட்டுரைகளின் மீதான கோபம் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், நிறுவனம் செயல்படத் தடை விதிக்கப்படவில்லையே, அதில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் எந்த அளவிற்கு முதலீடு செய்யலாம் என்ற வரம்புதானே நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது இந்தியாவில் இயங்குகிற இப்படிப்பட்ட எல்லா இணையத்தள ஊடகங்களுக்கும் பொருந்துவதுதானே எனறு ஆட்சியாளர்கள் தரப்பினர் வாதிடக்கூடும்.

அமெரிக்காவில் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மீது கடுமையான விமர்சனங்கள் பாய்ந்தபோது, 2005ஆம் ஆண்டில், வெரிஸான் என்ற பன்னாட்டு ஊடக நிறுவனத்தால் தொடங்கப்பட்டது ‘ஹஃப்போஸ்ட்’. பல நாடுகளிலும் பதிப்புகளைத் தொடங்கிய அந்த நிறுவனம், 13ஆவது நாடாக இந்தியாவிற்குள் 2014இல் வந்தது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையை நடத்தி வரும் ‘டைம்ஸ் குரூப்’ நிறுவனத்துடன் இணைந்துதான் ஹஃப்போஸ்ட் இந்தியா தொடங்கப்பட்டது. 2017இல் அந்தக் கூட்டு முறிந்துவிட்டது. பின்னர் ஹஃப்போஸ்ட் மறுபடியும் வரத்தொடங்கியது.

பங்குகளை பகிர்வதில் என்ன சிக்கல்?

இந்த நிலையில் பஸ்ஃபீட் என்ற நிறுவனம் சென்ற வாரம்தான் ‘ஹஃப்போஸ்ட்’ தளத்தை வாங்கித் தன்னோடு இணைத்துக்கொண்டது. அப்போதிருந்தே இந்தியப் பதிப்பு ஊழியர்களுக்குத் தங்களது எதிர்காலம் பற்றிய கேள்வி உறுத்திக்கொண்டுதான் இருந்ததாம்.

புதிய கொள்கையால் இந்தியாவில் தொடர்ந்து செயல்படுவது பஸ்ஃபீல்ட் நிறுவனத்திற்குக் கடினமாக இருக்கும் என்று அதைச் சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அரசின் முடிவால் அந்த நிறுவனத்திற்கு என்ன இழப்பு? 26 சதவிகிதத்துக்கு மேல் பங்குகளை இந்திய நிறுவனங்களோடு பகிர்நதுகொள்வதில் என்ன சிக்கல்? மொத்தமாகக் கிடைத்து வந்த விளம்பர வருவாய் சுருங்கிவிடும் என்பதே முக்கியமான காரணம் என்று, இது பற்றிய செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியப் பதிப்பை நிறுத்திய நவம்பர் 24இல் பிரேசில் நாட்டில் நடத்திவந்த பதிப்பையும் பஸ்ஃபீட் நிர்வாகம் விலக்கிக்கொண்டுவிட்டது. அங்கேயும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம் என்று தெரிய வருகிறது..

கருத்துச் சுதந்திரப் போராட்டமா, வணிக வருமானப் பிரச்சினையா?

இதில் ஒரு சுவாரஸ்யமான நிலைமையை விமர்சகர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இந்தியப் பதிப்பு மூடப்பட்டுவிட்டாலும், இணையத்தளத்தில் ‘ஹஃப்போஸ்ட்’ அமெரிக்கப் பதிப்பை, அதன் இணையத்தள முகவரிக்குச் சென்று இந்திய வாசகர்கள் பார்க்க முடியும்! அதிலே வரக்கூடிய இந்திய நிலவரங்கள் தொடர்பான செய்திகளையும் கட்டுரைகளையும் படிக்க முடியும்!

எப்படியோ, ‘ஹஃப்போஸ்ட் இந்தியா’ மூடல் ஒரு கருத்துச் சுதந்திரப் போராட்டமா, வணிக வருமானப் பிரச்சினையா என்ற கேள்வி தொடரவே செய்கிறது. அத்துடன் இந்தக் கேள்விகளும் இணைகின்றன: வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுடன் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய இதர இணையத்தள ஏடுகள் என்ன முடிவெடுக்கப் போகின்றன? அவற்றில் பணிபுரிகிறவர்களுக்கு எத்தகைய நாளைப்பொழுது வரப்போகிறது? வாசகர்கள் தேர்வு எப்படி இருக்கப்போகிறது? பார்க்கலாம்.

வெள்ளி, 27 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon