டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன்

public

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பின்னங்காலில் காயமடைந்தார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாகத் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜன் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது என்ற செய்தியை [தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜனுக்கு வாய்ப்பு?]( https://www.minnambalam.com/entertainment/2021/01/01/6/australia-series-chance-to-t-natarajan) ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், “இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் தனது நான்காவது ஓவரை வீசியபோது எதிர்பாராத விதமாகக் காயத்தால் அவதிப்பட்டார். உடனே அவரை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். அவருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்” என இதுகுறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.

இடது கை வேகப் பந்துவீச்சாளரான நடராஜன் தனது அசாத்தியமான யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். டிஎன்பிஎல், ஐபிஎல் என்று தனது திறமையால் முன்னேறிய டி.நடராஜன், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் நெட் பவுலராகச் சென்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் இந்திய அணியில் பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்ததால், டி.நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது அசாத்தியமான பந்துவீச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தி தனக்கான இடத்தை உறுதி செய்தார். ஒருநாள், டி20 தொடர் முடிந்தாலும் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அவரை டெஸ்ட் தொடரில் வலைப்பயிற்சியில் பந்து வீசுவதற்குப் பயன்படுத்திக்கொண்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. கோலியின் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் அவர் உடனடியாக இந்தியா திரும்பினார். அவருக்குப் பதிலாக, ரஹானே கேப்டன் பொறுப்பேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியதில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது.

இருப்பினும், டெஸ்ட் அணியில் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் அவருடைய திறமை வெளிப்பட்டிருக்கும் என்று பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார். அதனால், அவருக்குப் பதிலாக நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

தற்போது பிசிசிஐ, ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழகத்தின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் இடம்பெறுகிறார்’ என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் நடராஜனின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *